Tuesday, August 12, 2014

மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்



இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை  வேண்டுவதாக அமைந்துள்ளது.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll

சொற்பொருள்:-
ஓம் = ஓம்; த்ரயம்பகம் = முக்கண்ணுடையவரே; யஜாமஹே = நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம்; சுகந்திம் = நறுமணமும் (எல்லா வளமும்); புஷ்டி = ஊட்டமும் (எல்லா நலமும்); வர்த்தனம் = பெருகும்படியாகச் செய்பவரே; உர்வாருகம் = வெள்ளரிப்பழம்; இவ = போல; ம்ருத்யோர் = (என்னை) இறப்பின்; பந்தனாத் = பிடியிலிருந்து; முக்ஷீய = விடுவித்து; மா = எனக்கு; அம்ருதாத் = இறவாமையை அருளும்.

மந்திரத்தின் பொருள்:-
ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.

விளக்கவுரை:-
ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் பொதுவானது. அதைத் தனியாக உச்சரிக்க சன்யாசிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. ஆகையால், மற்றோர்களும் அதை உச்சரித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக, அந்த ஓரெழுத்து மந்திரம் அனைத்து மந்திரங்களுக்கும் முதலில் உச்சரிக்கப் பெறுகிறது. இங்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது.

சிவபிரானுக்கு மற்ற பல அங்க அடையாள, அணிகலன்கள் இருக்க, இங்கு அவர் முக்கண்ணரே! என விளிக்கப்படுகிறார். காரணம், மற்றெந்த தெய்வத்திற்கும் இல்லாத இந்தச் சிறப்பை உடையவரே, மற்றெந்த தெய்வத்தாலும் அளிக்க இயலாத, பின்னால் கேட்கப் போகும் (இறவாமை என்ற) வேண்டுகோளை நிறைவேற்ற சக்தியுள்ளவர் என்று சுட்டிக் காண்பிப்பதற்காகவே ஆகும். மூன்றாவது கண்ணால் காமவேளை எரித்தவருக்கு, அதேபோல, யமனை எரிப்பது ஒரு பெரிய காரியமல்ல என்று கூறுவதுவும் ஏற்புடையதே.

சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து (இதற்கு வடமொழியில் ’அவ்யாஜ கருணா’ அல்லது ’நிர்ஹேதுக க்ருபா’ என்று பெயர்), நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார். அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே ’வர்தனம்’ என்ற சொல் உணர்த்துகின்றது. நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், ’புஷ்டி’ என்பது  உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன. வடமொழியில் ’யஜனம்’ என்றால் யாகம் செய்தல் என்று பொருள். பொதுவாக பூசிப்பது என்பது பொருளானாலும் சிறப்பாக யாகத்தால் பூசிப்பதையே குறிக்கிறது.

மரத்தில் ஏற்றி விடப்பட்ட வெள்ளரிக் கொடியில் காய் காய்த்துப் பழுக்கிறது. பக்குவம் வந்தவுடன் பழம் கொடியிலிருந்து விடுபடுகிறது. நிலத்தில் விழும் அதற்கு என்ன நேருகிறது?  அதே கொடி நிலத்தில் படருகிறது, காய்க்கிறது, பழுக்கிறது. பழம் எடை கூடுதலாக இருப்பதால், பக்குவம் வந்தவுடன், பழத்திற்குச் சேதமில்லாமல், கொடி பழத்திலிருந்து விடுபடுகிறது. அந்த நிலையே இங்கு விளக்கப்பட்டுள்ளது. நம்மைப் தன்பால் பிணைத்து வைத்துக் கொண்டுள்ள இறப்பு, நம்மிடம் இருந்து விலக அருள் புரிய வேண்டும் என வேண்டப்படுகிறது. வெள்ளரிக்காய் பழுத்த உடனேயே கொடி அதை விட்டுப் பிரிவதில்லை. பக்குவம் வர வேண்டியதுள்ளது. அதுபோல, சாகாமையை வேண்டினாலும் பக்குவம் வரும் போதுதான் அதை அடைய முடிகிறது. அதுதான் குருவருள். இறையருள் கிடைத்தாலும், குருவருளின்றிக் காரியம் கை கூடாது என்பது இங்கே, அதாவது பக்குவம் வந்தபோது தானாக விடுபட்டுப் போகும் கொடியினால், குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.

இறவாமை என்றால் என்ன? பிறந்த உடனேயே சாவதும் உறுதி. எவரும், எதுவும் நிலையல்ல; அப்படியிருக்க இறவாமையை எப்படி வேண்டிப் பெற முடியும்? இறவாமை, இப்பொழுது எடுத்துள்ள இப்பிறவியில் அல்ல. இனிப் பிறந்து-பிறந்து, இறந்து-இறந்து இளைக்காமல் இருப்பதுவே வேண்டப்படுகிறது. அதற்கு இம்மனிதப் பிறவி ஒரு கருவியாக இருக்கிறது. இம்மாதிரியான மந்திரங்களைச் சொல்லி, கேட்டு, சிந்தித்து, உணர்ந்து பயன் அடைய முடிகிறது.


எந்த மந்திரத்தை உச்சரித்தாலும்,  அதற்கேற்ற பயன் கிடைப்பது உறுதி. அதில் ஐயமில்லை. ஆனால் ஒலிநாடா சொல்லிக் கொண்டிருப்பது போலன்றி, அதன் பொருளறிந்து சொல்லுவது, பன்மடங்கு பயனை, உடனே அளிக்க வல்லது.        

- எழுதியர் ஸ்ரீ சாஸ்தா கோபால், கோவிந்தபுரம்

No comments:

Post a Comment