Tuesday, April 28, 2020

நடராஜ தத்துவம்

நடராஜ தத்துவம்
அரவிந்த் ஸுப்ரமண்யம்

அம்மையும் அப்பனும் பிரிக்கமுடியாத சக்திகள்.
கதிரவனும் ஒளியும் போல்
அரணியும் அக்னியும் போல்
சொல்லும் பொருளும் போல்
சிவமும் சக்தியும் ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பது.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது எவ்வளவு சத்தியமோ, அதேபோல் சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதும் சத்தியம்.

படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலையும் செய்யும் லலிதையைப் போற்றுகிறது லலிதா ஸஹஸ்ரநாமம். அதே பஞ்ச க்ருத்யங்களையும் செய்யும் பரம்பொருள் வடிவமே நடராசனின்
தாண்டவத்திருக்கோலம்.

இதையே தான் பஞ்ச க்ருத்ய பராயணா என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். நடராஜ ராஜனின் தாண்டவத்தை மஹேஸ்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணி என்று சொல்கிறது.

சிவ-சக்தி ஐக்ய வடிவமே சிதம்பரத்தின் சிறப்பு.

சிதம்பர ஸ்தலத்தின், மிக முக்யமான வழிபாடு ஸம்மேளன அர்ச்சனை என்று சிதம்பர ரகசிய கல்பம் சொல்கிறது. ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும், சிவகாம சுந்தரியையும் சேர்த்தே வழிபடுவதே ஸம்மேளன அர்ச்சனை.

ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ என்று லலிதையின் ஸஹஸ்ரம் துவங்குவது போலவே, ஸ்ரீசிவ ஸ்ரீசிவாநாத ஸ்ரீமாந் ஸ்ரீபதிபூஜித என்று சபாபதியின் ஸஹஸ்ரநாமமும் ஸ்ரீ என்ற மந்த்ர ஒலியிலேயே துவங்குகிறது.

(இது போல சிவமும் சக்தியும், பின்னிப்பிணைந்திருக்கும் ரஹஸ்ய தத்துவங்களே சிதம்பர ரஹஸ்யம். அது இன்னும் நிறைய உண்டு. பொதுவெளியில் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன் - அரவிந்த் ஸுப்ரமண்யம்)

மகா பெரியவருக்கு அதனாலேயே நடராஜப் பெருமானிடம் பக்தி கூடுதல். அதிலும் குஞ்சிதபாதம் என்று சொல்லக்கூடியது தூக்கிய திருவடியின் மேல் சாற்றிய
பிரசாதங்களை அதீத பக்தியோடு ஸ்வீகரிப்பார்.

அந்த தூக்கிய திருவடியான குஞ்சித பாதத்திற்கு குஞ்சிதாங்க்ரிஸ்தவம் என்றே ஸ்ரீஉமாபதி சிவம் தனியாக ஸ்தோத்திரமே செய்திருக்கிறார்.

ஆனந்த நடனம் செய்யும் நடராஜ ராஜப் பெருமானின் ஸ்வரூபமே தனிப்பெரும் தத்துவ வடிவம்.

கையில் உள்ள உடுக்கை ச்ருஷ்டி தத்துவம்; அபயம் காட்ட கூடிய கை ஸ்திதி தத்துவம்; அக்னி சம்ஹார தத்துவம்; காலில் போட்டு மிதிக்கும் முயலகன் மறைந்திருக்கும் திரோதானம்; கீழே சுட்டிக்காட்டும் இடதுகையே அனுக்கிரகம்.

அந்த அனுக்ரஹம் செய்யும் இடது கை, குஞ்சித பாதம் என்னும் இடதுகாலைச் சுட்டிக் காட்டுகிறது.

ஸ்ரீகண்டார்த்த சரீரிணி என்றல்லவா
அம்பிகை விளங்குகிறாள் ? சிவபெருமானின் நேர் பாதி அவளேயல்லவா?

எனவே நடராஜப்பெருமானின் தூக்கிய இடது திருவடி அம்பிகைக்கு உரியது. அந்த திருவடியே மோட்சத்துக்கு கதி என்பதை நடராஜ தத்துவம் உணர்த்துகிறது.

இதையேதான் ஸ்ரீவித்யா தத்துவத்தில் குரு பாதுகை என்றும், அதுவே அர்த்தநாரீஸ்வர பாதுகை என்றும் உணர்த்தப்படுகிறது.

அதனால்தான் காமக் கோட்டத்தில் உரையும் சிவகாமசுந்தரியை
ஸாக்ஷாத் த்ரிபுரசுந்தரி
என்றே ஞானிகள் போற்றுகிறார்கள்

சிவ சக்தி தத்துவ ஸம்மேளனமே சிதம்பர தத்துவம்!

சிவசக்த்யைக்ய ரூபிணி லலிதாம்பிகா
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

No comments:

Post a Comment