Monday, August 7, 2023

புதுக்குளத்து ரசம்

புதுக்குளத்து ரசம்!

- அரவிந்த் ஸுப்ரமண்யம் 



புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அந்த காலத்தில் சேஷையா சாஸ்திரி என்றொருவர் திவானாக இருந்தார். ஏற்கனவே இவர் குறித்து நான் தடி கொண்ட அய்யனார் என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.

 புதுக்கோட்டை அய்யனார் கோவிலை மாற்றி அமைத்தவர் இவரே !


மிகச் சிறந்த அறிவாளி!  அதே சமயம் காரிய பிராப்த்தியும் உள்ளவர்!


இவரது பராக்கிரமங்களை எல்லாம் புதுக்கோட்டை மக்கள் கதை கதையாக சொல்வார்கள்.


 நேற்று புதுக்கோட்டையில் புவநேச்வரி ஆலயத்தில் இருந்து நடந்து வந்து புதுக்குளத்தை கண்டபோது சேஷையா சாஸ்திரிகள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் நினைவுக்கு வந்தது.


ஒரு சமயம் அரண்மனையில் ஒரு சமையல்காரர் வந்திருந்தார். திவானான சாஸ்திரிகள், அவரைக் கேள்வி கேட்டுக்  கொண்டிருந்தார்.


"உனக்கு என்னவெல்லாம் சமைக்க தெரியும் ?"


"ஆயிரம் பேர்  ஒரே சமயத்தில் வந்தாலும் விதவிதமாக சமையல் பண்ணி போடுவேன்" என்று பெருமையாக சொன்னார் சமையல்காரர்.


"அதெல்லாம் சரி, உமக்கு ரசம் வைக்க தெரியுமா ?" என்றார் திவான்.


 சமையல்க்காரருக்கு சுர்...  என்று கோபம் வந்துவிட்டது!


"இவ்வளவு தின்பண்டங்கள், சமையல் காரியங்களை பண்ணக் கூடியவன் நான்! என்னிடம் போயும் போயும் ரசம் வைக்க தெரியுமா என்று கேட்கிறீர்களே?" என்றார்.


திவானும்,

"ஆமாம் சரியான கேள்வி தான். ரசம் என்பது சரியான படி வைத்தால் தான் அதன் மணம்,குணம், சுவை, காரம் எல்லாம் அப்படி அற்புதமாக இருக்கும். எனவே ஒருத்தன் சரியாக ரசம் வைத்துவிட்டானானால் மற்ற பதார்த்தங்களையும் நன்றாகவே செய்து விடுவான் என்று அர்த்தம்" என்றார்.


"அதெல்லாம் நான் ப்ரமாதமாக வைப்பேன்" என்றார் சமையல்காரர்.


"சும்மா வீட்டில் உள்ள பத்து பேருக்கு சமையல் செய்து விடலாம்! ஆயிரக்கணக்கான பேர் சாப்பிடும் இடத்தில் ரசத்தை அதே சுவையுடன் செய்ய முடியுமா ?" என்றார் சாஸ்திரிகள்.


சமையக்காரர்க்கு இன்னும் ரோஷம் வந்துவிட்டது! 


புதுக்கோட்டையில் அப்போது குடி தண்ணீருக்காக இந்தப் புதுக்குளம் பிரபலமாக இருந்தது. 


“ஆயிரம் பேருக்கென்ன? நான் சொல்கிறபடி செய்து, நான் கேட்கும் படி சரியான அளவில் பொருளை வாங்கி கொடுத்தால்,  நான் இந்த புது குளம் முழுவதுமாக குளத்திலேயே சுவையாக ரசம் வைப்பேன்" என்று துணிச்சலாகச் சொன்னார்.


திவானும் அசரவில்லை ! “,ஓ! அப்படியா? அதையும் பார்ப்போமே.. என்னென்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.


“அந்தக் குளத்தைச் சுத்தமாக இறைத்துவிட வேண்டும். பதினைந்து நாள் யாரையும் உள்ளே விடக்கூடாது. நான் சொல்லுகிற சாமான்களை வாங்கித் தர வேண்டும். அப்படிச் செய்தால் புதுக்குளத்தில் ரசம் வைத்துத் தருகிறேன்.”



சேஷையா சாஸ்திரியார் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.குளத்தை இறைக்கச் செய்தார். 


பருப்பு,உப்பு,புளி, மிளகாய், பெருங் காயம் முதலிய சாமான்களைச் சமையற்காரர் சொன்ன அளவில் வாங்கித் தந்தார். 


சமையல்காரரும் அந்தக் குளத்தில் எப்படி அவற்றைச் சேர்க்க வேண்டுமோ அப்படிச் சேர்த்தார். 

 


புதுக்கோட்டையில் நல்ல நாளிலேயே வெயில் மண்டையைப் பிளக்கும். நான் இரண்டு நிமிஷம் நடப்பதற்கே சுருண்டு விட்டேன். அவ்வளவு வெயில்! அது நல்ல கோடைக் காலம். சில காலம் ரசம் நன்றாக வெயிலில் காய்ந்தது. 


பிறகு அதிலிருந்து ரசத்தைக் கொண்டு வந்து திவானிடம் கொடுத்தார்.


திவானும் சுவைத்துப் பார்த்தார். அற்புதமான ரசம்! சமையல்காரரை மனமார பாராட்டிய திவான் அந்த சமையல்காரர் கைக்குத் தங்கத்தில் தோடா (காப்பு) செய்து போட்டார்.


புது குளத்தின் பிரம்மாண்டமான அளவை பார்த்த உடனே இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது! 


 உடனே பிரமிப்பும் ஏற்பட்டது !

இவ்வளவு பெரிய குளத்தில் ஒருவர் ரசம் வைத்திருக்கிறார் என்றால் அவர் எப்பேர்பட்ட கைதேர்ந்த கலைஞராக இருந்திருப்பார்?


அப்படிப்பட்ட ஒருத்தரை சவாலுக்கு அழைத்து அவர் திறமையை வெளிக் கொண்டு வந்த திவான் 

எப்படிப்பட்ட ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார் ?


இது போன்ற பல திறமைசாலிகளையும், நிர்வாகத் திறம் கொண்டோரையும் இனி காண்போமா ?  என்ற கேள்வியும் மனத்துள் எழுந்தது!

Article by Aravind Subramanyam

No comments:

Post a Comment