Thursday, August 9, 2012

ப்ரிய ராதே.... ப்ரிய ராதே....



சுமார் 5 -6 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய கட்டுரை இது.. வெளிவந்த காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது... 

பக்தியே  உபாசனைக்கு அடிப்படை... அந்த நிலையில் நான் ஆழ்ந்திருந்த போது, அன்றைய கால கட்டத்தில் "திடும்" என அருட்ப்ரவாஹமாக ஏற்பட்ட ஒரு ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தின் பின்னணியில் நான் எழுதிய கட்டுரை இது...

கிருஷ்ண ஜெயந்தியா இன்று ஏனோ அதைத் தேடி எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றியது. இன்றைய  எனது கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும் என்று நினைத்தே படித்துப் பார்த்தேன்...   (ஆனால் அப்படியொன்றும் மாறியதாக தெரியவில்லை.. )

கிருஷ்ண ஜெயந்தியன்று படித்துப் பார்த்த பொது நானும் ஒரு சராசரி வாசகனாக மகிழவே செய்கிறேன் 

ஸ்வாமி சரணம் 
V.அரவிந்த் ஸுப்ரமண்யம்
---------------------------------------------------

ப்ரிய ராதே.... ப்ரிய ராதே.... 
V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஸர்வ ஸ்ம்ருதி புராண இதிஹாஸ சாஸ்த்ரார்த்த ஸ்வரூபிணீம், ஸக்ருத் ப்ரபன்ன
 ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித கடாக்ஷிணீம்... 
ஸ்ரீ ராதா நாம்னீம் ஸாக்ஷாத் பரிபூர்ண தம ஸ்வரூபிணீம் கன்யாம்...

ராதா கல்யாணம் நடக்கும் இடங்களிலெல்லாம் முழங்கும் கோஷம் தான்..
ஆனால் ராதை யார் என்று சரியாக புரிந்து கொண்டிருக்கிறோமா?
ஆயர்குல மங்கை, வ்ருஷபானுவின் மகள்,
கண்ணனின் மனதுக்கினிய காதலி,
அவனது ப்ரேமையின் மொத்த உறைவிடம்...
அவ்வளவு தானா?

க்ருஷ்ணன் பட்டத்து ராணியாக கொண்டது ருக்மிணி ஸத்யபாமா முதலியவர்களை தானே? ராதையை அவன் ப்ருந்தாவனத்தை விட்டு த்வாரகைக்கு வந்ததும் கூட்டி வரக் கூட இல்லையே? எத்தனையோ நாயகியர் இருக்க ராதா-க்ருஷ்ணன் ஜோடிக்கு அப்படி என்ன உசத்தி? இதே கேள்வியை ஒருமுறை பல ஞானிகள் ப்ரம்மாவிடம் கேட்டார்கள்.

அவர் சொன்னார்:
"அவளே ஆதி சக்தி ! தெய்வ சக்திகளுக்கெல்லாம் மூல காரணமாகவும், அதை காப்பவளாக இருப்பதும் அவளே!
ராதிகோபனிஷத் கூறும் உண்மை - 
க்ருஷ்ணேன ஆராதிதா இதி ராதா
- க்ருஷ்ணனால் ஆராதிக்கப்பட்டவள் ராதை. அவளே பூஜைக்குரியவள். அவள் பெருமையை கூற என் ஆயுள் முழுதும் போதாது."

ர - கோடி ஜன்ம பாவங்களும் ஒழியும்
ஆ - பிறவியையும், நோயையும், மரணத்தையும் போக்கும்
த - நீண்ட ஆயுளை தரும்
ஆ - உலகத் தளைகளை நீக்கும்

அவள் சாதாரண மானிடப் பெண், பல க்ருஷ்ண பக்தைகளுள் ஒருத்தி என்று எண்ணி ஏமாந்து போகக் கூடாது.
கண்ணனும் ராதையும் வேறானவர்கள் இல்லை. ராதையே கண்ணன். கண்ணனே ராதை.

ஆதிமூலமான பரம்பொருள், உலக இயக்கத்துக்காக தன்னிலிருந்து தானே இரு கூறுகளாக ஆண்-பெண் வடிவாக பிரிந்தது. அதுவே க்ருஷ்ணனும் ராதையும்.
மூல ப்ரக்ருதியான ராதையிடமிருந்தே லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் தோன்றினார்கள்.

ஆம் ! ராதையும் க்ருஷ்ணனும் மும்மூர்த்திகளுக்கும் மேம்பட்ட, ஆதாரமான சக்தி.
ஸாக்ஷாத் விஷ்ணுவும் லக்ஷ்Eமியும் கூட அவர்களுக்கு ஈடாக மாட்டார்கள். க்ஷ்மியும் விஷ்ணுவும் ராதா-க்ருஷ்ண தம்பதியினரின் 16ல் ஒரு பங்கு அம்சம்
கொண்டவர்களே என்கிறது ப்ரம்ம வைவர்த்த புராணம். ப்ரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்மையும் ராதையின் அம்சமே !மற்ற எல்லா தேவியர்க்கும் ஆதி மூல சக்தியாக விளங்குபவள் ராதா தேவி தான். ஜீவர்கள் எல்லாரிடமும் ஆத்மசக்தியாக இருப்பவளும் அவள்தான்.அவள் என்றும் எங்கும் பரம்பொருளாய் விளங்கி இருப்பவள். ஆனால் மறைவாக இருப்பவள். அதனால் தேவாதி தேவரும், தவ ச்ரேஷ்டர்களாலும் கூட அறிய முடியாதவள்.

ப்ரம்மா ஸத்ய லோகத்திலும், விஷ்ணு வைகுண்டத்திலும், சிவன் கைலாசத்திலும் உறைவது போல, மும்மூர்த்திகளுக்கும் ஆதி நாயகியான ராதா, உலகத்து உயிர்களே பசுக்களாக, அவற்றை மேய்க்கும் நாயகனுக்கு இணையாக எல்லா தேவ உலகங்களுக்கும் மேலாக விளங்கும் கோலோகம் என்ற ஒரு தனி உலகில் க்ருஷ்ண ஸஹிதையாக நிலைபெற்று அருளாட்சி புரிகிறாள். 

பூமியில் அரக்கரின் கொடுமை அதிகமான போது, ப்ரம்மாதி தேவர்கள் வைகுண்டத்தில் நாராயணனிடம் முறையிட, அவரது யோசனைப்படி மூவரும் கோலோகம் வந்து அங்கிருக்கும் க்ருஷ்ண பரமாத்மனை பூமியில் அவதரிக்க வேண்டினார்கள். அதைத் தொடர்ந்து வந்ததே ராதா க்ருஷ்ணனின் பூலோக அவதாரம்.

கோலோகம்
- அகில உலகுக்கும் ஆதி சக்தியான பரம் பொருள், ஆணும் பெண்ணுமாய், அரசனும் அரசியுமாய், ராதையும் க்ருஷ்ணனுமாய் பிரிந்து அருளாட்சி புரியும் தலம். கற்பக வ்ருக்ஷங்களும் தங்கமும் வைரமும் மின்னும் அழகு வனங்கள்,  அதில் பாடும் பறவைகள், அவற்றைச்சுற்றி ரத்னக்கற்கள் மிதக்கும் தெள்ளிய நதிகள், மயக்கும் மலர்கள் கொஞ்சும் நந்தவனங்கள், ராஸலீலைக்கென்றே அமைந்த
ப்ருந்தாவனம் எனும் அற்புத வனம், அதன் நடுவே மலர்மஞ்சம், சுற்றிலும் துள்ளித்திரியும் ஆவினமும் கன்றுகளும்; பேரழகும் கொண்டு ராதா-க்ருஷ்ண ப்ரேமையில் மனம் லயித்து விளங்கும் பல கோடி கோப கோபியர், பூவுலகில் பல நூறு பிறவிகளில் ராதா க்ருஷ்ணனை பணிந்து அந்த பக்தியின் பயனாய் இவ்விடம் அடைந்த பக்தர் குழாம்- கோலாகலமாக விளங்குகிறது ‘ஆனுலகு' என்று தீந்தமிழ்
அழைக்கும் கோலோகம்.

கோலோக ராணியாக க்ருஷ்ணனுடன் லீலை புரிந்து, யாருக்கும் எட்டாத பரம் பொருளாக நின்ற அவளை முதன்முதலில் ஆராதிக்க முடிந்தது ஒருவனால் தான். வேறு யார்? ஸாக்ஷாத் ஸ்ரீ க்ருஷ்ணனே தான்.

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் ப்ருந்தாவனத்தின் நடுவே ராஸமண்டலத்தில் ராதையை இருத்தி, கண்ணன் அவளை முதலில் வழிபட்டான். மாயக் கண்ணன் வழிகாட்டிய பிறகுதான், அவன் காட்டிய வழியில் தொடர்ந்து ப்ரம்மாதி தேவர்களும் சனகாதி ரிஷிகளும் ராதையை பூஜித்து மகிழ்ந்தார்கள். ஸரஸ்வதி தேவி தன் இனிய வாக்கால் ராதா-க்ருஷ்ண தம்பதியரை பாடி மகிழ, பேரானந்தத்தில் முழுகிய சிவபெருமான், வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத ராதிகா தேவியின் ஆயிரம் நாமங்களை ராதிகா ஸஹஸ்ரநாமமாக வெளிப்படுத்தினார்.

பூவுலக அவதாரத்தை முன்னிட்டு க்ருஷ்ணன் ஒரு நாடகத்தை அரங்கேற்றினான். கண்ணன் கோலோகத்தில் ராதைக்கு தெரியாமல் விரஜை எனும் கோப ஸ்த்ரீயுடன் கேளிக்கை புரிய, இதை அறிந்த ராதை வெகுண்டு கண்ணதை ஏசி பூமியில் பிறக்கும்படி சபித்தாள். இதைப் பார்த்த ராதையின் பிள்ளை போன்ற ஸ்ரீதாமன், மனம் வருந்தி, ராதையையும் ஆயர் குலத்தில் பிறந்து நூறாண்டுகள் கண்ணனை பிரிந்திருக்கும்படி சபித்தான். இப்படி கோலோகத்தில் இருந்த தம்பதியர், மக்களை உய்விக்க எண்ணம் கொண்டு பூலோக லீலைக்காக இந்த திட்டத்தை அரங்கேற்றினார்கள் தானும் கண்ணனும் பிரியக் கூடாது என்ற வேண்டுகோளுடன் ராதை பூவுலகில் அவதாரம் செய்ய தீர்மானித்தாள். ப்ரபஞ்ச நாடகத்தில், பூவுலக மக்கள் பால் கருணை கொண்டு, நமது இந்த வராஹ கல்பத்தில் த்வாபர யுகத்தில் ஆயர் குலத்தில்
வ்ருஷபானுவின் மகளாக கோபிகையாக வேடம் பூண்டு அவள் வந்தாள்.

க்ருஷ்ணாஸ்யர்தாங்க ஸம்பூதா நாதஸ்ய ஸத்ருசீ ஸதீ
கோலோக வாஸினா ச்ரேயம் அத்ர க்ருஷ்ணஞ்ய
அதுனா ஆஜோனி ஸம்பவா தேவீ மூல ப்ரக்ருதி ஈச்வரீ
கோலோகத்தின் சிறந்த ப்ரஜைகள் க்ருஷ்ணனின் கட்டளைப்படி தோன்றினார்கள். மூல ப்ரக்ருதியான அவள், தாயிடம் தோன்றாமல் அவனது பாதி சரீரத்திலிருந்து தோன்றி தன் உருவை அமைத்துக் கொண்டாள். ஸாக்ஷாத் க்ருஷ்ணனேயான ராதை, கலாவதி எனும் மங்கை கர்ப்பம் தரித்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி அயோனிஜையாக புவியில் தோன்றினாள்.

முன்பு, ப்ரம்மதேவன் 60ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தும் கனவிலும் காணமுடியாத ராதிகா தேவி, எளிய ஆயர் குல மக்கள் யாவரும் காண ப்ருந்தாவனத்தில் நடமாடினாள். கோலோகத்தை விட்டு பர்ஸானாவில் அம்பிகை அவதாரம் செய்திருப்பதை அறிந்த நாரதர், அங்கு விரைந்தார். ராதிகா தேவி எனும் அக்குழந்தையை மடியில் கிடத்தினார். மயிர் கூச்செறிய, உடல் நடுங்க, ஆனந்த கண்ணீர் பெருக தன் பாக்யத்தை எண்ணி மகிழ்ந்தார். பக்த சிகாமணியான அவரை ராதா தேவி குஸும ஸரோவரத்துக்கு வரச் சொல்லி தன் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை அவருக்கு காட்டியருளினாள்.

ப்ரேமை எனும் சக்தியே ராதை. எங்கு ப்ரேமை இருக்கிறதோ அங்கு ராதை இருக்கிறாள். பக்தி மார்க்கத்தில் அவளது அருள் இல்லாமல் ஒரு அடி கூட முன்னேற முடியாது. கண்ணனுடன் ஒன்றிவிட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தான் உண்டு. நாமும் கோபிகையாகி அவனுடன் ராஸலீலையில் ரமித்து அதிலேயே கரைந்து விடுவது. இந்த நிலை சாமான்யர்களான நமக்கு கிட்டுமா? அதை கிடைக்க செய்யவே ராதை அவதரித்தாள்.

அவளுக்காக கோலோகத்து சேடிகளெல்லாம் பூலோகத்தில் கோப ஸ்த்ரீகளாக அவதரித்தார்கள். அவள் ராஸ கேளி புரியும் வனமான ப்ருந்தாவனத்தையும் கூட க்ருஷ்ணன் பூலோகத்தில் தோன்றச் செய்தான். 

"பார்த்தா ! மூவுலகங்களிலும், பூவுலகமே மேலானது. ஏனென்றால் ப்ருந்தாவனம் இங்குதான் இருக்கிறது. அங்கிருக்கும் கோபிகைகளும் அப்படித்தான். ஏனென்றால் என் ஸ்ரீமதி ராதா அவர்களுடன் தான் இருக்கிறாள்" -தன் நண்பன் அர்ஜுனனிடம் பெருமையாக சொல்லிக் கொள்கிறான் மாதவன். தேவகிக்கு மகனாக சிறையில் தோன்றிய கண்ணன், கம்சனுக்காகவா யமுனையை கடந்து கோகுலம் வந்தான்? தன் ப்ரிய ஸகிக்காகத்தான் அவன் நந்தன் இல்லம் புகுந்தான்.

ஒரு முறை, குழந்தைக் கண்ண்னை ஏந்தியபடி நந்தன் ப்ருந்தாவனத்துக்கு பசுக்களை மேய்த்தபடி சென்றார். அப்போது பெருமழையும் காற்றும் வரவே, குழந்தை பயந்து அழுதது. அப்போது தெய்வீக திட்டப்படி ராதிகா தேவி அவ்விடம் வந்து சேர்ந்தாள். குழந்தையை வீட்டில் சேர்க்கும்படி அவளிடம் நந்தன் கொடுத்தார். அப்போதே அவர் அஞ்ஞானம் நீங்கி ராதையின் உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்து
வணங்கினார். கோலோகத்தில் அவருக்கும் யசோதைக்கும் ஓர் இடமுண்டு என்பதை வரமாக அருளிய ராதா கண்ணனுடன் வனம் புகுந்தாள்.

அற்புதமான அழகிய நந்தவனமும், ரத்ன மண்டபமும், உப்பரிகையும் அமைத்து குழந்தையை பார்த்த போது, அவனைக் காணவில்லை. மண்டபத்தின் உள்ளே யௌவன புருஷனாக ராஜகோபாலன் வீற்றிருந்தான். கோவிந்தன் ராதைக்கு பழைய கோலோக வ்ருத்தாந்தத்தை நினைவூட்டி, ப்ரம்மனை அழைத்தான். ப்ரம்மன் முன்பு செய்த தவத்தின் பயனாய், திவ்ய தம்பதியரை வணங்கி, கிடைத்தற்கரிய பேறாக ராதா-மாதவ விவாஹத்தை அங்கு நடத்தி வைத்தார்.

எப்பேற்பட்ட பேறு? விடுவாரா? தானே ராதைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து தாரை வார்த்துக் கொடுத்தார். ராதையே ஜீவாத்மா, கண்ணனே பரமாத்மா. இந்த ஜீவ ப்ரம்ம ஐக்யமே மஹாராஸம் எனும் ராஸ லீலை. 

ஆத்மா து ராதிகா தஸ்ய ... எனும் ஸ்கந்த புராண ஸ்லோகம்,
"ராதையே ஆத்மா. அந்த ஆத்மாவுடனே எப்போதும் உறவாடுவதாலேயே, க்ருஷ்ணன் 'ஆத்மாராமன்' ஆகிறான்" என்கிறது.

இதுவே கோபியருடன் அவன் புரிந்த ராஸலீலை. உலக வாழ்வில் ஒவ்வொரு கோபிகையும் மணமானவள். கண்ணனோ குழந்தை. ஆனால் யாவரும் அனைத்தையும் மறந்து பரம்பொருளான கண்ணனுடன் ஒன்றி அவனை சூழ்ந்து பேரானந்தமாக ஆடும் நிலையில் கண்ணன் பல உருவெடுத்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கண்ணனாக உடன் ஆடினான். ஜீவாத்மாக்களான ஒவ்வொரு கோபிகையும் ராதையின் அம்சமே, அதனால் தான் கண்ணன் ஒவ்வொருத்தியுடனும் தனித்தனியே கேளிக்கை புரிய முடிகிறது.

இதில் காமமோ விரஸமோ இல்லை. அனைத்தும் கடந்த ப்ரேம நிலை. ப்ரம்மனையும் சிவனையும் கூட வென்ற மன்மதன் ஒருமுறை கண்ணனிடம் வந்தான். "நாங்கள் ராஸம் புரியும் போது கோபிகைகளில் ஒருத்தியையாவது காமவசப்பட செய்துதான் பாரேன்.."
ராதை இருக்கும் தைரியத்தில் கண்ணன் நன்றாகவே அவனை தூண்டி விட்டான்.

பௌர்ணமி நிலவொளியில் கோபிகைகள் நடனமாடத்துவங்க, மதனவேள் மலர்கணைகளை தொடுத்தான். ஆனால் அவன் சக்தி அங்கு செல்லுபடியாக வில்லை. மூலஸ்தானமான ராதாதேவியிடமிருந்து பொங்கிய பேரானந்த அலையில் கோப கோபியரும், ஆடு மாடுகளும், ஏன் மரமும் செடியும் கூட மூழுகி லயித்திருந்தது. மயக்க வந்த மதனன் தானும் மயங்கி கண்ணனிடன் சரணடைந்தான்.

அன்புருவான ராதை துஷ்ட நிக்ரஹம் எனும் ஸம்ஹாரத்தை கூட ஒப்பாதவள்; அன்பு ஒன்றே அவள் ஆயுதம். அவளே அன்பு. அந்த அன்பு எனும் அமுதத்தில் மூழ்கச் செய்து எவர் மனத்தையும் மாய்த்து விடுவாள். மனம் மாண்ட பின்  இறைவனிடம் ஒன்றி விட வேண்டியது தானே? இந்த தத்துவத்தையே ஜெயதேவர் அஷ்டபதியாகப் பாடி மகிழ்ந்தார். 

ராதை வணங்கும் நாயகன் கண்ணனாக இருந்தாலும், கண்ணன் வணங்கும் தெய்வம் ராதைதான்; கண்ணனின் ப்ராண சக்தியே ராதை. ஜீவாத்ம பரமாத்ம ஐக்யத்தை உணர்த்த பூமியில் இருவரும் அவதரித்து நாடகமாடினார்கள். கோலோகத்தில் ராதையை எப்போதும் கொண்டாடி மகிழ்ந்த கண்ணனுக்கு, பூலோக அவதாரத்தில் அவளை அப்படியே பக்தையாக விட்டு விட மனமில்லை. இதனால் ஒரு பொய் கோபத்தை உருவாக்கி ஊடல் கொண்டு, அதை தணிக்கும் முகமாக, ராஸேச்வரியின் திருப்பாதங்களை தன் தலைமேல் வைத்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டான்.

ஸ்மரகரள கண்டனம் மம சிரசி மண்டனம்
தேஹி பத பல்லவம் உதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கதனானலோ
ஹரது தது பாஹித விகாரம் (அஷ்டபதி)
(ராதையின் பாதங்கள் கண்ணன் தலையிலா? என்று இதை ஜய தேவர் எழுத தயங்கிய போது, தானே அவர் உருவில் வந்து எழுதி, தன் செயலை பெருமையாக சொல்லிக் கொண்டான்)

ராதையின்றி கண்ணனை வழிபடுவதில் அர்த்தமில்லை. ராதையும் க்ருஷ்ணனும் இருவேறு வடிவங்கள் அல்ல. ஒன்றேயான ப்ரம்பொருள் ப்ரேமை எனும் ஆனந்த அனுபவத்துக்காக இரண்டாக பிரிந்து விளையாடுகிறது. ராதையின்றி கண்ணனே இல்லை என்பதே உண்மை.

மயாவினா த்வம் நிர்ஜீவா
சாத்ருச்யோஹம் த்வயா வினா த்வயா வினா பவம் கர்தும்
நாலம் சுந்தரி நிஸ்சிதம் (ப்ரம்ம வைவர்த்த புராணம்)
"நானின்றி நீ உயிரற்றவள்; நீயின்றி நான் உடலற்றவன். அழகி, நீ இல்லாமல்
என்னால் இருக்க முடியாது" - கண்ணன் ராதையிடம் சொன்ன கனிமொழி இது.

அவனே நாரதரிடம் மீண்டும் மீண்டும் அடித்துச் சொல்கிறானே:
ஸத்யம் ஸத்யம் புன: ஸத்யம் ஸத்யம் ஏவ புன: புன: |
வினா ராதா ப்ரஸாதேன மத் ப்ரஸாதோ ந வித்யதே || (நாரத புராணம்)
"நாரதா ! நான் ஸத்தியமாக ஸத்யமாக சொல்கிறேன், திரும்ப திரும்ப ஸத்யமாக
சொல்கிறேன், ராதையின் கருணை இல்லாமல் என் அருளை அடைய முடியாது"

இன்றும் அவள் அருள் இன்றி ப்ருந்தாவனத்தில் நுழைய கூட முடியாது. ப்ருந்தாவன பக்தர்கள் இதை நன்குணர்ந்தவராய் ராதையையே அதிகம் போற்றுகின்றார்கள். "ஜெய் ராதா ராணி !" என்றே கோஷமிடுகிறார்கள்.

ஒரு முறை நாரதர் நாராயண ரிஷியிடம் முக்தி ஸித்திக்கும் மார்க்கத்தை கேட்டார். அதனால், இவ்வுலகுக்கு மாபெரும் பேறாக, ராதையின் மூல மந்த்ரம் கிடைத்தது.
" இது வேதத்தில் சொல்லப்பட்ட ரஹஸ்யம். மூல ப்ரக்ருதி வடிவான அவளே ! முத்தொழிலையும் செய்து வருகிறாள். அனைத்துலகும் அவள் ஆஞ்ஞைக்கு கட்டுப்பட்டே இயங்குகின்றன. அவளது அருளே முக்தியை தரும். பராத்பர ரூபமாகவும், முப்பெரும் தெய்வங்களாலும் தொழப்படும் ராதிகா தேவியின் மூலமந்த்ரம் "ஸ்ரீ ராதாயை ஸ்வாஹா" என்பதாகும்.

இந்த மாமந்த்ரம் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கையுமே தரக்கூடியது. ஸ்ரீ க்ருஷ்ணன் இந்த மந்த்ரத்தை கோலோகத்தில் ராஸமண்டலத்தில் ராதாதேவியிடமிருந்தே உபதேசம் பெற்றார். அவரிடமிருந்தே இம்மந்த்ரம் மற்றவர்களுக்கு கிடைத்தது. இந்த மந்த்ரத்தால் அம்பிகையை ஆராதித்து அவளது ஸஹஸ்ரநாமத்தால் பூஜிப்பவர்க்கு கோலோகத்தில் நிச்சயம் ஒரு  இடம் உண்டு.”

இத்தனை பெருமை கொண்ட ராதையை பற்றி க்ருஷ்ண பக்தியின் உச்ச காவியமான ஸ்ரீமத் பாகவத புராணம் பேசவே பேசாது ! 'ராதா' என்ற பெயர் கூட அதில் இருக்காது ! அதிசயமாக இருக்கிறதா? இதன் காரணம் இன்னும் அதிசயமானது. 
மெய்சிலிர்க்க வைப்பது:

பாகவத புராணம் பரீக்ஷித் மஹாராஜாவுக்கு சுகப்ரம்ம ரிஷியால் சொல்லப்பட்டது. பரீக்ஷித் உயிர் துறக்க 7 நாட்களே மீதம் இருந்த நிலையில் சொல்லப்பட்டது பாகவதம். வ்யாஸரின் பிள்ளையான இந்த சுகர் யார் தெரியுமா? பூர்வ ஜன்மத்தில் ஸாக்ஷாத் ராதையின் கையில் இருந்த கிளியேதான் அவர். தன் தெய்வமான "ராதா" என்ற பெயரைச் சொன்னால் அவர் ஆறு மாதம் ஸமாதியில் ஆழ்ந்து விடுவார். பின் ஏழு நாட்களுக்குள் பாகவதம் எப்படி பூர்த்தியாகும்?

ஸ்ரீ சுக உவாச என்று பாகவதம் கூறும் இடமெல்லாம் "ராதையின் கிளி சொன்னது" என்றே பொருள்படும். இதுவே மறைபொருளான உண்மை. அப்படியானால் ப்ரேமபாவத்தின் ரஸமான பாகவத்தின் ஒவ்வொரு துளியிலும் அவளன்றோ இருக்கிறாள்?

ராதையே க்ருஷ்ணனின் ப்ராணேச்வரி; அவன் பூஜிக்கும் ராஸ மண்டலேச்வரீ; அவன் ராஸ லீலையின் ராஸ ரஸிகேச்வரீ; அவளே க்ருஷ்ண ப்ரேமையின் வழி. கண்ணனை அடைய துடிக்கும் பக்தர்கள் ராதையின் அருளால் தாங்களும் கோபிகைகளாகி ராஸத்தில் அவனுடன் லயமடைகிறார்கள். கண்ணன் கை கொண்ட வேய்குழல் என்ன? ப்ரேமஸ்வரூபமான இந்த ஆய் மகளின் ப்ரேமையின் வடிவமே அது. அதனாலன்றோ அந்த நாதத்தில் கோபியர்கள் தங்களையும் மறந்து லயிக்க முடிந்தது?

இதுவே ராஸலீலையின் ஸாரம். இதுவே ராதா க்ருஷ்ண மாதுர்யம்.

"அற்புதமானதும், ஆனந்தமானதும், ச்ருங்கார சுவை கொண்டதும், கேட்டதை
கொடுக்கவல்லதும், காளிந்தி நதிக்கரை மண்டபத்தில் யோகி போல் அமர்ந்து,
தேஜோமயமான ஸ்ரீராதையின் திருவடித்தாமரைகளை த்யானம் செய்து கொண்டு,
ப்ரேமையால் கண்களில் கண்ணீர் பெருக, கண்ணனால் ஜபம் செய்யப்படும் ராதா-
எனும் ஈரெழுத்து என்றும் என் (நம்) நெஞ்சில் நிலை பெறட்டும்"
(ராதா ராஸ ஸுதாநிதி)

May Lord Hariharaputra be with you always, giving you the best of everything.


Swamy Sharanam
V.Aravind Subramanyam


Ph: (0)99946 41801

No comments:

Post a Comment