வல்லபா தேவி
எந்த ஒரு உபாஸனைக்கும் முதன் முதல் படி நிலையாக விளங்குபன் கணபதி. இவனது சக்தி ஸ்வரூபிணியே வல்லபை.
ஆன்மீக வாழ்வுக்கும் கூட விக்னங்கள் நேரலாம். சோம்பல், கர்வம் முதலான குணங்கள் தலை தூக்குமாயின் அது ஞான மார்க்கத்துக்கு விக்னம் ! அதனை வெல்ல யோக சக்தியால் மட்டுமே முடியும். அந்த யோக சக்தியே கணபதி !
அக்ஞான வடிவான விக்னங்களை அழிக்கும் ஞானஸ்வரூபம். அவனே ஞானஸ்வரூபனாக விளங்கி நம்முள் அந்த ஞானத்தை விதைக்கிறான். அந்த ஞான ஸ்வரூபத்தை இயக்கும் சக்தியாக விளங்குபவள் வல்லபா தேவி.
வல்லபை என்பவள் கணேசனின் சக்தி ஸ்வரூபிணியாக விளங்குபவள். இவளுக்கே ஸித்தலக்ஷ்மி, வரமஹாலக்ஷ்மி என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
கதை என்று பார்க்கப்போனால் இரண்டு மூன்று கதைகள் உண்டு.
கணேச புராண கதையின் படி சிவனே கணபதியாகி நிற்க, சக்தியே வல்லபையானாள் என்றொரு அத்யாயம் உண்டு.
மற்றொரு புராணத்தில், பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் குழந்தையைக் கண்டெடுத்து "வல்லபை' என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையான அவளை அசுரன் கேசி கடத்திச் செல்ல, சிவனும், விநாயகரை அனுப்பி அசுரர்களை அழித்து வல்லபையை மணமுடித்தார்.
லலிதா த்ரிபுர ஸுந்தரி பண்டாஸுரனுடன் போர்புரியும் போது தேவிக்கே விக்னம் உண்டாகிறது. அப்போது தேவி ஈச்வரனின் முகத்தைப் பார்க்க, காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேச்வர என்று அங்கே பத்து கைகளுடன் வல்லபா சக்தியுடன் கணேசன் தோன்றினான் என்கிறது லலிதோபாக்யானம்.
இந்த கதைகளின் உண்மைப் பொருள் - கணேசனின் சக்தியே வல்லபைதான் என்பது !
எந்த ஒரு தேவதா ஸ்வரூபமும் பரப்ரம்ம வடிவானதே !
சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த:?
என்கிறார் சங்கரர். ஆக ஜட தத்துவமும் சக்தி தத்துவமும் இணையும்போதே உலக இயக்கம் நடக்கிறது.
இங்கே ஒரு ப்ரபஞ்ச ரஹஸ்யமுண்டு ! பரப்ரம்மம் சிவன், விஷ்ணு, கணபதி, சாஸ்தா, ஸ்கந்தன் என பல மூர்த்திகளாக வெளிப்படும் போது, ப்ரம்ம சக்தியான மாயையும் அவர்களுடன் காட்சி தருகிறது.
இந்த மாயைக்கு இரண்டு சக்திகள் உண்டு; ஒன்று ஆவரண சக்தி மற்றொன்று விக்ஷேப சக்தி. இதுவே தெய்வங்களின் இரண்டு சக்திகளாக காட்சி தருகிறது.
மந்த்ர சாஸ்த்ரத்தில் உள்ள ஒரு சூக்ஷ்மம் : மோக்ஷத்தை கொடுக்க வல்ல பரப்ரம்ம மூர்த்திகளுக்கு இரண்டு மனைவியர் உண்டு. (அதற்காக இரு மனைவியர் உள்ள தெய்வங்கள் எல்லாம் பரப்ரஹ்ம மூர்த்திகள் இல்லை என்பதையும் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்). இவ்வாறு மனைவியர் இருவரும், அதோடு ஆதார சக்தி ஸ்வரூபமாக ஒரு தேவியும் உள்ளவர்களே பரப்ரம்ம மூர்த்திகள்.
ப்ரம்மம், சிவஸ்வரூபமாகும் போது மாயை பார்வதியாகிறது. அந்த பார்வதியே இரண்டு சக்திகளாகி கங்கா-கௌரி என்று பிரிகிறார்கள்
ப்ரம்மம், விஷ்ணு ஸ்வரூபமாகும் போது மாயை வைஷ்ணவீ என்றாகிறது. அந்த வைஷ்ணவியே இரண்டு சக்திகளாகி ஸ்ரீதேவி-பூதேவி என்று வடிவெடுக்கிறார்கள்.
ப்ரம்மம், ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாகும் போது மாயை கௌமாரி என்று பெயர் பெறுகிறாள். அந்த கௌமாரியே இரண்டு சக்திகளாகி வள்ளி-தேவசேனா என்று விளங்குகிறார்கள்.
ப்ரம்மம், மஹாசாஸ்தா ஸ்வரூபமாகும் போது மாயை ப்ரபா எனப்படுகிறாள். அந்த ப்ரபா தேவியே இரண்டு சக்திகளாகி பூர்ணா-புஷ்கலா என்று பெயர் பெறுகிறார்கள்.
அதே போல ப்ரம்மம், மஹாகணபதி ஸ்வரூபம் என்று உருவெடுக்கும் போது மாயை வல்லபா என்று பெயர் பெற்று விளங்குகிறாள். அந்த வல்லபையே இரண்டு சக்திகளாகி ஸித்தி-புத்தி என்று மனைவிகளாகின்றனர்.
பீஜாபூர கதேக்ஷு கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல:
வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ:
த்யேயோ வல்லபயா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா
விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:
மாதுளை, கதை, கரும்பு, வில், ஒளிதரும் சக்கரம், தாமரை மலர்,கயிறு, நெய்தல், நெற்கதிர், தமது கொம்பு ஆகியவற்றை முறையே தமது பத்துத் திருக் கரங்களிலும், பதினோராவது துதிக்கையில் ரத்தினகலசத்தைத் தரித்துக் கொண்டுள்ளவரும், தமது மடியில் கையில் தாமரை மலருடன் அமர்ந்துள்ள அன்புக்குரிய நாயகியினால் தழுவப் பெற்றவரும், அகிலம் அனைத்தையும் படைத்து, அழித்து, காப்பவருமான மஹா கணபதியை நான் சேவிக்கிறேன்.
இவன் ஸ்வரூபமே இவனே முத்தொழிலுக்கும் முதல்வன் என்று உணர்த்துகிறது.
(மூலமந்த்ர உபதேசம் பெற்றவர்களுக்கு :
மஹாகணபதியின் ஒவ்வொரு மந்த்ர பீஜங்களுக்கும் விளக்கம் உண்டு. வல்லபைக்கும் தனியே மூலமந்த்ரம் உண்டு; அச்சு அசலாக அதே பீஜங்களே இங்கும் இருப்பதை காணலாம். ஆனால் அவற்றையெல்லாம் இங்கே தரவில்லை.)
கையில் உள்ள மாதுளங்கனி சாமான்யமானதல்ல அண்டங்கள் அனைத்தும் மாதுளம்பழத்தில் உள்ள ஒவ்வொரு முத்து. இப்படி பலப்பல அண்டங்களையும் உள்ளடக்கி ப்ரபஞ்சம் முழுவதையுமே தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறான் கணேசன். வெறுமனே கையில் வைத்தால் போதுமா? அந்த ப்ரபஞ்சங்கள் இயங்க வேண்டாமா? அதனை இயங்கச் செய்யும் சக்தியே வல்லபை !
சுருக்கமாக சொன்னால், இப்படி அகில உலகையும் ஆட்டிவைக்கும் கணேசனையும் ஆட்டி வைப்பவள்.
உலகுக்கெல்லாம் ஆதிமுதல்வனின் சக்தியாகி அபரிமிதமான கருணையை பொழியும் வல்லபா தேவி நமக்கும் தன் பேரருளை வழங்கட்டும்.