Protected by Copyscape Website Copyright Protection

Wednesday, April 5, 2017

ராமாவதாரமும் சாஸ்தாவும்

ராமாவதாரமும் சாஸ்தாவும்
V. Aravind Subramanyam
______________________________________________________________________________
இன்று ஸ்ரீராம நவமி !

அவதார மூர்த்திகளிலேயே புருஷோத்தமன் என்று போற்றப்படும் உன்னத உத்தம அவதாரம் ராமாவதாரம். 

ராமாவதாரம் ஸகல தேவதாம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு அவதாரமாக போற்றப்படுகிறது. பிறவியிலேயே அவதார புருஷனாக தோன்றிய ராமனுடன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேவதாம்சம் இணைந்து அவனை பூர்ணாவதாரம் ஆக்கியது. பரசுராம கர்வ பங்கத்தில் விஷ்ணுவாம்சமும், சிவதனுசை முறிக்கும் காலத்தில் சாஸ்தாவின் அம்சமும், கரதூஷணர்களை அழிக்கும் காலத்தில் ருத்ராம்சமும், நவராத்ரி விரதம் பூர்த்தியாக்கி சக்தியம்சமும் ராமனுடன் கலந்தன.

ராமாவதாரத்துக்கு துணை செய்ய ஸகல தேவர்களும் துணை நின்றார்கள்.


இந்த ராமாவதாரத்தின் துவக்கத்தில் ராமன் அவதரிக்கும் வேளையில் அதற்கு காரண புருஷனாக பகவான் சாஸ்தா விளங்கி நின்றார். நான் எனது மஹாசாஸ்தா விஜயம் நூலுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது பல அரிய தகவல்களை திரட்ட முடிந்தது. 


தசரதனின் புத்ர காமேஷ்டி யாகத்தில் யக்ஞ புருஷனாக யாக குண்டத்தில் தோன்றி திவ்ய பாயஸத்தை அளித்தது சாஸ்தா தான் என்ற கருத்தினை வில்லிவாக்கம் ஸ்ரீ விச்வநாத சர்மாஜி அவர்கள் சாஸ்தா மஹாத்மியம் என்ற அவரது பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். இதே கருத்தினை உள்ளகரம் கோபால க்ருஷ்ண பாகவதரும் வலியுறுத்தி எழுதி இருந்தார். ஸ்ரீ சாஸ்தா கோபால் அவர்களும் தன் "மகர ஜோதி " நூலில் இதனை விரிவாக பதிவு செய்து இருந்தார். 

அதே சிந்தனையில் தான் ஸ்ரீராம நவமியன்று, பகவானின் ஸ்மரணம் உண்டானது. 

ராமாயணத்துக்கு உரை எழுதிய பலரும் இந்த யக்ஞபுருஷன் யார் என்று சரியாக உணர்த்தவில்லை. சிலர் விஷ்ணுவே தான் என்று கூறிவிட்டார்கள். மேலும் சிலர் பொதுவாக ப்ராஜாபத்ய புருஷன் என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

ராமாயணத்தில் இதனைக்குறித்து காணப்படும் குறிப்புகளும், அந்த திவ்யபுருஷன் சாஸ்தாவே தான் என்று மறைமுகமாக உணர்த்துகிறது.

புத்ரேஷ்டி யக்ஞாக்னி குண்டாத் ப்ராதுர் பூதேன ப்ராஜாபத்ய புருஷேண பாயஸாஸ்யார்ப்பணம் தத் புக்த்வா ராக்னீம் கர்ப்ப தாரணம் என்றே ஸர்க்கத்தின் தலைப்பு கூறுகிறது.


வால்மீகி ராமாயணத்தில் பாயஸம் கொண்டு வந்த திவ்ய புருஷன் பற்றிய வர்ணனை பால காண்டத்தில் 16வது ஸர்க்கத்தில் மிகவும் விஸ்தாரமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சாஸ்தாவுக்கு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த வர்ணனைகள் அனைத்தும் பகவானின் ஸஹஸ்ரநாமத்திலும் அஷ்டோத்ரத்திலும் வரும் நாமாக்களுடன் பொருந்தி வருவது ஆச்சர்யம் தருகிறது.

ततो वै यजमानस्य पावकात् अतुल प्रभम् |
प्रादुर्भूतम् महद्भूतम् महावीर्यम् महाबलम् || 
ததோ வை யஜமானஸ்ய பாவகாத் அதுலம் ப்ரபம்
ப்ராதுர்பூதம் மஹத்பூதம் மஹாவீர்யம் மஹாபலம்

कृष्णम् रक्ताम्बर धरम् रक्ताअस्यम् दुन्दुभि स्वनम् |
स्निग्ध हर्यक्ष तनुज श्मश्रु प्रवरम् ऊर्धजम् || १-१६-१२
க்ருஷ்ண ரக்தாம்பர தரம் ரக்தாஸ்யம் துந்துபி ஸ்வனம் 
ஸ்நிக்த ஹர்யக்ஷ தனுஜ ச்மச்ரு ப்ரவரம் ஊர்த்தஜம் 

शुभ लक्षण संपन्नम् दिव्य आभरण भूषितम् |
शैल शृङ्ग समुत्सेधम् दृप्त शार्दूल विक्रमम् || १-१६-१३
சுப லக்ஷண ஸம்பன்னம் திவ்யாபரண பூஷிதம் 
சைல ச்ருங்க ஸமுத்ஸேதம் த்ருப்த சார்தூல விக்ரமம் 

தசரதனின் யக்ஞ குண்டத்திலிருந்து தேஜோமயமான, மஹாபலமும் பராக்ரமம் கொண்ட மஹத்தான திவ்யபுருஷன் தோன்றினார். 

கருநிற ஆடைகளை அணிந்து, சிவந்த ஆபரணங்கள் பூண்டு, சிவந்த முகத்துடன், முரசு ஒலி போன்ற கம்பீரக் குரலுடன், சிங்கத்தின் பிடர் மயிர் போல தலைமுடியும் மீசையும் கொண்டு அவர் விளங்கினார். 

எல்லா சுபலக்ஷணங்களையும் கொண்டு, திவ்ய ஆபரண பூஷணங்கள் தரித்து, மலை போல உயர்ந்து நின்று, புலி போன்ற பராக்ரமமும் கொண்டவராக அவர் விளங்கினார்.

(மஹாவீர்யம், மஹாபலம் என வர்ணிப்பது மட்டுமல்லமல், க்ருஷ்ண ரக்தாம்பரதரம் என்பது சாஸ்தாவின் த்யான ச்லோகங்களில் காணப்படுகிறது. சிகையலங்காரம், மீசை போன்றவை - "ச்மச்ரு ஸ்வயாலங்க்ருதம்" என்று சாஸ்தாவின் த்யான வர்ணனைக்கு ஒத்துவருகிறது.)


दिवाकर समाअकारम् दीप्त अनल शिखोपमम् |
तप्त जाम्बूनदमयीम् राजतान्त परिच्छदाम् || १-१६-१४
दिव्य पायस संपूर्णाम् पात्रीम् पत्नीम् इव प्रियाम् |
प्रगृह्य विपुलाम् दोर्भ्याम् स्वयम् मायामयीम् इव || १-१६-१५
திவாகர ஸமாகாரம் தீப்த அனல சிகோபமம்
தப்த ஜாம்பூனத மயீம் ராஜதாந்த பரிச்சதாம்
திவ்ய பாயஸ ஸம்பூர்ணாம் பாத்ரீம் பத்னீமிவ ப்ரியாம்
ப்ரக்ருஹ்ய விபுலாம் தோர்ப்யாம் ஸ்வயம் மாயமயீமிவ

சூர்யன் போன்ற ஒளிமிக்க வடிவும், அக்னிக்கு ஸமமான பொலிவும், தனது ப்ரியமான மனைவிகளே மாயையால் உருவெடுத்து வந்தது போன்று, வெள்ளி மூடியுடைய தங்கப் பாத்திரத்தை, பாயஸத்தை பூர்ணமாக நிரப்பி, பரந்த தன் கரங்களில் சுமந்தபடி தோன்றினார்.

(வெள்ளி மூடி கொண்ட தங்கப்பாத்திரத்தை திவ்ய புருஷன் பற்றி இருப்பது அவனது ப்ரியமான மனைவிகளுடன் ஒப்பிடப்படுகிறது - பூர்ணா என்றால் வெள்ளி; புஷ்கலம் என்றால் தங்கம்)

समवेक्ष्य अब्रवीत् वाक्यम् इदम् दशरथम् नृपम् |
प्राजापत्यम् नरम् विद्धि माम् इह अभ्यागतम् नृप || १-१६-१६
ஸமவேக்ஷ்ய அப்ரவீத் வாக்யம் இதம் தசரதம் ந்ருபம்
ப்ராஜாபத்யம் நரம் வித்தி மாம் இஹ அப்யாகதம் ந்ருப 

தசரத ராஜனைக் கண்ட அந்த திவ்ய புருஷன், "அரசனே ! உன் ப்ராஜாபத்யத்துக்காக நான் வந்தேன் என்று அறிவாய்" என்றார்.

(ப்ராஜாபத்ய ஸ்வரூபகாய நம: என்பது பகவானின் ஸஹஸ்ரநாமார்ச்சனை. அதாவது கருவை உண்டாக்கும் சக்தி வடிவானவன் என்று பொருள்.) 

கம்பராமாயணம் இதே சம்பவத்தைக் குறிப்பிடுகிறது.

காதலரைத் தரும் வேள்விக்கு
உரிய எலாம் கடிது அமைப்ப.
மா தவரில் பெரியோனும்.
மற்றதனை முற்றுவித்தான்;
சோதி மணிப் பொற் கலத்துச்
சுதை அனைய வெண் சோறு ஓர்
பூதகணத்து அரசு ஏந்தி.
அனல்நின்றும் போந்ததால்.

மைந்தர்களைக் கொடுத்திடும் பெரிய வேள்விக்கு உரிய பொருள்கள் எல்லாவற்றையும் விரைவாகக்
கொண்டுவந்து சேர்த்து, பின்னர் பெருந் தவமுடைய முனிவர்களில் சிறந்த (ருஷ்யச்ருங்கர்) கலைக்கோட்டு முனிவரும் அந்த வேள்வியைச் செய்து முடித்தார்;

அந்த ஹோம நெருப்பிலிருந்து பூத கண
அரசனான பூதநாதன் ஒளிமிக்க அழகிய பொற் கலசத்தில் அமுதம் போன்ற வெண்ணிறமான பாயசத்தை எடுத்துக் கொண்டு வெளிப்பட்டார்.

பெரியோர்கள் பல அரிய உண்மைகளை மறைபொருளாகவே உணர்த்துவார்கள். அதை நாம் தான் உணர வேண்டும்.

சாஸ்தா புத்ரப்ராப்தி அளிப்பதில் ஸமர்த்தர். "ப்ராப்தித புத்ர ப்ரதம்" என்றே முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவரை போற்றுகிறார். தன் மூலமந்த்ரத்திலேயே புத்ரலாபத்தைத் தருபவன் என்ற பதம் இருப்பது இவர் ஒருவருக்குத் தான். 

ஆக ப்ராஜாபத்ய புருஷன் என்று சாஸ்தாவை அழைப்பது ஒன்றும் புதிது அல்ல !

ப்ரஜாதந்து ப்ரதாய நம:
புத்ர வர்த்தனாய நம: என்றெல்லாம் நாமாக்களும் இதை உணர்த்துகிறது. 

கேரள கல்பம், சாஸ்தா கல்ப மஞ்சரீ போன்ற நூல்களில் இந்த சம்பவமும் ராமாவதாரத்தில் சாஸ்தாவின் பங்கும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

(Article written by Aravind Subramanyam - its a copyright Material -So share the article with the above original link)