ஞானவாபியின் கதை
கடந்த டிசம்பர் மாதம்காசி விஸ்வநாதர் கோவில் விரிவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த போது வாரணாசியில் ஒரு வாரம் தங்கி இருந்த காரணத்தினால் அதை குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் அந்த கட்டுரை இப்படி முடிந்தது.
//"இன்று இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகிவிட்ட பின்பும், நந்தி பரிதாபமாக ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது என்னை மீறி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது. விஸ்வநாதர் ஆலய வளாகம் பிரமாண்டமாக உருவாகி விட்டது. வெகு விரைவில் மசூதி அகற்றப்பட்டு அங்கே மூலஸ்தானத்தில் முக்தி மண்டபத்தில், ஈசன் அமரவேண்டும் அதையும் நாம் நம் வாழ்நாளில் காண வேண்டும்.//
-அரவிந்த் ஸுப்ரமண்யம்
அன்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்கிறேன் ! இன்று ஒரு புதிய அத்தியாயம் துவங்கியிருக்கிறது;
சிவபெருமானின் ராஜதானியாக விளங்கும் விஸ்வநாதர் ஆலயம் வானளாவ எழுந்து நின்றதும், ஈசன் தனக்காக காத்திருக்கும் நந்திக்கும் மகிழ்ச்சி தரத் தீர்மானித்து விட்டார் போலும்.
நான் சிறுவனாக இருந்தபோது தான் அயோத்தியா கரசேவை குறித்த விழிப்புணர்வு நாடெங்கும் துவங்கியது ! அப்போது எங்கள் கோவை முழுவதும் பரபரப்பாக இருந்தது.
அயோத்தி கரசேவைக்கு எங்கள் வீட்டுப்பக்கத்திலிருந்தவர்கள் செங்கல் எடுத்துக்கொண்டு பயணப்பட்ட கதைகளை கேட்டேன்.
அயோத்தியை மீட்போம் என்று எங்கெல்லாம் எழுதி இருந்ததோ அங்கெல்லாம் கீழே விரைவில் காசி மதுரா என்று அதில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் ! அப்படியென்றால் என்ன என்று தேடப்போய், அப்போது தான் இந்த பிரச்சினை என்ன, நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு அவர்கள் இழந்த விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.
அயோத்தியின் கரசேவை முடிந்துவிட்டது விரைவில் அங்கே கோவில் வந்துவிடும் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
அவ்வப்போது நினைத்துக் கொள்வேன் : "விரைவில் காசி மதுரா என்று பார்த்தோமே, அயோத்தியே இன்னும் வரவில்லையே எப்போது காசிக்கும் வடமதுரைக்கும் விடிவு காலம் வரப்போகிறது "என்று.
அந்த விரைவு வருவதற்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது!
ஆனால் அயோத்தி துவங்கியதும் நம்பிக்கை துளிர்த்தது!
அயோத்தி ராமனின் கும்பாபிஷேகம் நடப்பதற்கு உள்ளாகவே விஸ்வநாதனின் லீலையும் தொடங்கிவிட்டது.
இன்று மசூதியாகக் காணப்படும் இடம் தான், விஸ்வநாதன் ஆசைப்பட்டு அமர்ந்த முக்தி மண்டபம். அவருடைய உண்மையான மூலஸ்தானம்.
"நான் கைலாசத்தை கூட விட்டு விடுவேன். ஏன்? உங்களை கூட விட்டு விடுவேன்; ஆனால் என்னால் விட முடியாத ஒரு விஷயம் ஒன்று இருக்குமானால் அது காசி மாநகரம் தான்" என்று சிவபெருமான் அம்பிகையிடமும் தன்னுடைய கணங்களிடமும் சொல்லுவதாக காசிகாண்டம் கூறுகிறது.
அப்படி சிவபெருமானுக்கு மனதுக்கு இனிய அந்த காசி க்ஷேத்திரம் இழந்த தன் முழுப்பொலிவை அடையும் காலம் நெருங்குகிறது என்று மனம் துன்பத்திலும் ஆனந்தம் கொள்கிறது.
ஞானவாபி என்றால் என்ன?பரமேஸ்வரனின் மூலஸ்தானம் இருந்த முக்தி மண்டபம் கர்ப்பக்ரஹம் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே ஔரங்கசீபினால் மசூதி உருவாக்கப்பட்டது. பிந்து மாதவர் ஆலயம் இருந்த இடத்திலும் மசூதி உருவானது.
பல்லாண்டுகளுக்குப் பின் ஆலயம் அகல்யாபாய் மஹாராணியால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. விச்வநாதர் தன் சொந்த இடத்தை இழந்து, அவிமுக்தீஸ்வரருடைய ஆலயத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டார் (இன்று நாம் காணும் ஆலயம்). பிந்துமாதவரும் இன்றும் ஓர் வீட்டின் மாடியில் இருப்பதைக் காணலாம்.
இதுதான் வரலாறு !
ஒரு படையெடுப்பு நடக்கும்போது, அதிலும் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் படையெடுப்பு நடக்கும் போது இது போன்ற விஷயங்கள் நடக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்று அங்கீகரித்தால் கூட பரவாயில்லை. ஆனால் நடுநிலை பேசுகிறேன் என்று சிலர் இப்போது இதை பிரச்சனையாக வேண்டுமா என்று கேள்வி கேட்பதும், அதைவிட ஒருபடி மேலே போய் அவுரங்கசீப் மதநல்லிணக்கத்தை பேணினார் அதற்காகத்தான் ஆலயத்தின் அருகிலேயே மசூதி அமைத்துக் கொடுத்து இரண்டு மதத்தவரும் ஒற்றுமையாக இருக்க வழிவகை செய்தார் என்பதெல்லாம் நகைச்சுவையின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும்.
மசூதிக்கு உள்ளே ஆலய அமைப்பு அப்படியே இருப்பதையும், அங்கே நம் தெய்வ திருவுருவங்களும் அலங்கார வளைவுகளும் இருப்பதும் இன்றளவும் நாம் பார்க்கமுடியும். இன்று நாம் காணும் விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் நந்தி ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருப்பது கண்கூடு.
உலகத்திலேயே எங்கேயாவது மசூதிக்கு ஞானவாபி என்ற பெயர் வைத்து பார்த்ததுண்டா ?
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்ற வார்த்தைக்கு ஏற்ப கண்ணுக்கு நேராக பார்த்தாலே தெரிகிறது - ஆலயம் சூறையாடப்பட்டு அங்கேயேதான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று. ஆனால் அதை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இத்தனை வருடங்கள் இழுத்தடித்ததே நம் தேசத்தின் சாபக்கேடு.
ஞான்வாபி மசூதி வளாகம் விஸ்வநாதர் ஆலயமே ! அது மஸ்ஜித் அல்ல என்பதை நிலை நிறுத்திட பண்டிட் கேதார்நாத் வியாஸ் போன்ற பலரும் பாடுபட்டனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 அன்று எந்த ஒரு முஸ்லீமும் ஞானவாபி வளாகத்திற் குள் சென்று தொழுகை நடத்திடாமல் அவ்விடத்தை பாதுகாத்தார்.
ஏற்கனவே பலரும் இது இந்து கோவில் தான் என்று வழக்கு தொடுத்து நடத்திக் கொண்டிருந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஞானவாபி மசூதிக்குள் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு என்று ஏதேதோ காரணம் காட்டி அது எதையுமே அப்போதிருந்த அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. 1991ம் ஆண்டின் சட்டத்தை காரணம் காட்டி அது நம் கோவில் தான் என்பதையே காது கொடுத்துக் கேட்க மறுத்து விட்டார்கள்.
இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது ! இது மசூதி கட்டிடம் தான் ! இது கோயிலே இல்லை ! என்று அனத்தி கொண்டிருப்பவர்கள் ஒரு விஷயத்தை சௌகரியமாக மறந்து விடுகிறார்கள்.
ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் தான், விச்வநாதரின் ஆலயத்தை சேர்ந்த, காசி காண்டத்தில் சொல்லப்படும் பழமையான ச்ருங்கார கவுரி விக்ரஹம் உள்ளது.
இந்த சந்நிதியில் வழிபட ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்து பெண்கள் 5 பேர் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
‛‛ஞானவாபி மசூதி வளாகத்தின் மேற்கு சுவர் அருகே இந்த சந்நிதி அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும். இதுதவிர கோவில் வளாகத்தில் உள்ள பிற விக்கிரஹங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்து மே 10க்குள் சமர்பிக்க உத்தரவிட்டது.
இதேபோன்ற உத்தரவு இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டு இருந்தபோதும் அப்போது இருந்த அரசாங்கங்கள் அதை நடைமுறைப்படுத்த தயங்கியது. ஆனால் நிச்சயமாக இந்த அரசாங்கத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும் ! தைரியமாக இந்த விஷயத்தை முன்னெடுத்து மேற்கொண்டு ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில் தான் ஆய்வுக்குழு, ஞானவாபி மசூதி வளாகத்தில் கிணறு போன்ற அமைப்பின் உள்ளே சிவலிங்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். வஸுகானா என்ற, அவர்கள்கை கால்களை சுத்தப்படுத்தும் குளத்தின் உள்ளே சிவலிங்கம் இருந்தது என்று மனம் பதைக்கும் செய்தி வருகிறது. இன்னும் இரண்டு லிங்கங்கள் கிடைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே ஒரு வீடியோ கிளிப் தான் இப்போது வெளியே வந்துள்ளது.
இதுதான் விஸ்வநாத மூல லிங்கம் என்றும், சிவாலயத்தில் இருக்கும் ரிஷிகளால் பூஜை செய்யப்பட்ட லிங்கங்களில் ஒன்றாக இது இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
விஸ்வநாத மூல லிங்கம் சுயம்பு லிங்கம். அது இனி முழுமையாக லிங்கத்தை தரிசனம் செய்தும், ஆராய்ச்சிகளுக்கும் பின்னரே தெரிய வரும்.
இப்போது ஞானவாபி மசூதி என்பது தான் நம் மூலக்கோயில் இருந்த இடம் என்பது கண்ணுக்கு நேராக தெரிந்த போதும், சட்ட ரீதியான ஆதாரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அது ஒரு இந்துக் கோயில் தான் என்பதற்கான தெளிவான ஆதாரமாக இது விளங்குகிறது.
இதில் வரவேற்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் பல இஸ்லாமியர்கள், " ஆமாம்! எங்களுடைய மூதாதையர்கள் இந்த இடத்தை ஆக்கிரமித்து ஆலயத்தை இடித்துவிட்டு மசூதி கட்டியிருக்கிறார்கள். இந்த இடத்தில் ஆலயம் வருவது தான் சரி" என்கிற ரீதியில் வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்கள்..
நம்முடைய சனாதன தர்மத்தை சேர்ந்த ஒரு ஆலயத்துக்கும் ஒரு மற்ற மதத்தைச் சேர்ந்த ஆபிரகாமிய மதத்தை சேர்ந்த வழிபாட்டு தலத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
மற்ற மதங்களில் எல்லாம் வழிபாடு செய்வதற்கான ஒரு இடம் மட்டுமே! ஆனால் நம்முடைய ஆலயம் இறைவன் வசிக்கக்கூடிய இல்லம். இது இறைவன் நடந்த இடம்; இறைவன் குடியிருக்க கூடிய மாளிகை; இறைவனை ஜீவனுள்ள ஒரு சைதன்யமாக நாம் உணர்கிறோம் !
மற்றவர்களுக்கு அவர்கள் வழிபாட்டை செய்வதற்காக கூடும் ஒரு தலம் மட்டுமே ! அது எங்கே இருந்தாலும் ஒன்று தான்.
நமக்கோ மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற ஒவ்வொன்றுக்கும் விசேஷம் உண்டு.
ஈசன் விரும்பி அமர்ந்த முக்தி மண்டபம் இருந்த இடம் அது.
அஷ்டதிக் பாலகர்களின் ஒருவரான ஈசானரால் உருவாக்கப்பட்ட கிணறு ஞானவாபி.
மூர்த்தியோ 12 ஜோதிர்லிங்கங்கள் இலும் முதன்மையான விஸ்வநாத லிங்கம்.
அதனால் அந்த இடத்தின் மகத்துவம் எழுத்து எழுத்தில் அடங்காது.
ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ராமபிரான் பட்டாபிஷேகம் காணுகிறார்.
அதேபோல் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு நந்தியம்பெருமானின் காத்திருப்புக்கு ஒரு பதில் கிடைக்க துவங்கியிருக்கிறது என்று தோன்றுகிறது!
அடமானத்தில் இருக்கும் பரம்பரைச் சொத்தை பல தலைமுறைகள் தாண்டி ஒருவனால் மீட்க முடியுமானால் அவன் என்ன ஆனந்தத்தை அடைவானோ அந்த ஆனந்தத்தை நாம் பாரதீயர்கள் அனைவரும் அடைய கூடிய காலம் நெருங்கி வருகிறது !
இவையெல்லாம் நாம் வாழும் காலத்திலேயே பார்க்கக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்று உள்ளுணர்வு சொல்கிறது!
வெகுவிரைவில் ஈசனை அவனுடைய முக்தி மண்டபத்தில் இருத்தி அங்கேயே தரிசிப்போம்
நம பார்வதி பதயே : ஹரஹர மகாதேவா
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்!