Wednesday, November 20, 2013

பாகம் 2 - பெரிய பாதையின் மஹத்துவம்

பாகம் 2 .......பெரிய பாதையின் மஹத்துவம் (தொடர்ச்சி)

பாகம் 1  படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்யவும் : 


ஏற்கனவே கூறியபடி ஒவ்வொரு கேந்த்ரத்தின் முக்கியத்துவத்தையும் காண்போம்

1. எருமேலி

அத்தனை பக்தர்களும் கூடும் இடம் எருமேலி. மஹிஷியை கொன்று வீசிய இடம் - மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்க வேண்டும். ஐயப்பன் போருக்கு வனம் புகுந்ததை நினைவு படுத்தும் முகமாக பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. 

எருமேலியில் மேற்கு பகுதியில் கிராத ரூபத்தில் சாஸ்தா ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இங்கு  கிராத சாஸ்தாவை த்யானித்து,  அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்க வேண்டும். 

அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்ட வேண்டும்.

மசூதிக்கு சென்று வணங்கும் வழக்கம் பண்டைய வழக்கம் இல்லை. (முன்பிருந்த வாபுரக் கோஷ்டமும் இப்போது காணப்படவில்லை... எனவே) கோட்டைப்படியில் மஹாகணபதியையும் பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்ல வேண்டும்.

2. பேரூர் தோடு

தோடு என்றால் நீர்நிலை. பெரியபாதையின் முதல் தாவளம் - தங்குமிடமும் இதுதான். இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

பண்டைய காலத்தில் வெளிச்சப்பாடின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரியபாதைக்குள் நுழைய முடியும்.  கொட்டாரக்கரை ஹரிஹரய்யர் காலத்துக்கு முன்பு வரை, வெளிச்சப்பாடு விபூதி ப்ரஸாதம் தந்தால் மேற்கொண்டு யாத்திரையை தொடரலாம். அல்லாமல் அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால் வீட்டுக்கு திரும்பி விட வேண்டியது தான்.

யாத்திரைக்கு அனுமதியில்லாத பக்தர்கள் யாத்திரைக்கு வரும் ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடைபெறுவர்.

வனதேவதைகளும், பூதகணங்களும், வன்மிருகங்களும் - இந்த விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு பக்தரை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

3. காளைகட்டி

காளைகட்டி ஆஸ்ரமம் என்றே இந்த இடத்துக்குப் பெயர். பலரும் சிவபெருமான் நந்தியைக் கட்டி வைத்த இடம் என்று கூறுவதுண்டு; ஆனால் அது சரியல்ல; (நந்தியென்ற உயர் சிவ கணத்தை கட்டி வைக்க வேண்டுமா? ஓடிப்போக அவர் என்ன நம் வீட்டு காளையா?)

உண்மை என்னவென்றால், இந்த இடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேச்வரன்; சைவ தர்ம சுரக்ஷிதனான சாஸ்தாவின் கணங்களில் அவரும் ஒருவர். எனவே அவரை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையை தொடர வேண்டும்.

4, 5. அழுதையும் அழுதை நதியும்

”பந்தள பூபபாலன் கருணா வருணாலயன் அலஸையில் விலஸும் ஈசன்” என்று ஐயப்பன் போற்றப்படுகிறான். அலஸா என்று அழைக்கப்பட்ட நதியே இன்றைய அழுதை நதி.

பம்பையின் ஒரு கிளை நதியான அழுதையில் ஸ்நாநம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகிக் கல்லை எடுத்துக் கொண்டு மடியில் காப்பாற்றி வைப்பது வழக்கம்.

அழுதை ஸ்னானம் செய்து இருமுடியை தலையில் வைக்கும் முன்பு குருநாதரை வணங்கி தக்ஷிணை கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும்.

6. கல்லிடும்குன்னு

கல்- இடும் - குன்னு என்றால் கல்லை இடும் குன்று. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இது தான். அழுதா மலையை ஏறி முடித்த பின்னர் மேட்டுப் பகுதியில் கற்களை விடுக்கிறார்கள். நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான பங்காக தீமையை அழிக்க ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.

பண்டைய காலங்களில் ஆத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவர்கள் இங்கு சிறப்பாக பூஜைகள் நடத்தி லீலாவதிக்கு ஆராதனை செய்யும் வழக்கம் இருந்தது. (இப்போது அப்படி எதுவும் நடப்பதில்லை)

7. உடும்பாறை இஞ்சிப்பாறை

அழுதாமேட்டை தாண்டி வடக்குப்பக்கம் சென்றால் வருவது உடும்பாறைக் கோட்டை. இங்கு சிலர் இரவில் தங்குவதும் உண்டு. இங்கு ஸ்ரீ பூதநாதரின் ஸாந்நித்யம் நிலை பெற்றிருப்பது கண்கூடு. ஸமஸ்த பூத கணங்கள் சூழ இங்கு அவர் வ்யாக்ரபாதன் என்ற பெயரில் இங்கு வசிக்கிறார். இரவு நேரங்களில் பூதத்தானின் சங்கிலி சத்தமும் கேட்பதுண்டு.

ஸ்ரீபூதநாதருக்கென விசேஷமான ஓர் பாறையும் அங்கே பகவானுக்கென விசேஷமாக ஆழி பூஜையும் நடத்துவது மரபு. இந்த ஆழியின் சாம்பலே ப்ரசாதமாக வழங்கப்பட்டது (மரங்களையும் தேங்காயையும் கொண்டே ஆழி நடத்துவது பண்டைய வழக்கம் இது பொதுவாகக் காணப்படும் கற்பூர ஆழியிலிருந்து மாறுபட்டது.) பார்வதீபுரம் வெங்கடீச்வர ஐயர் காலம் வரை தடங்கலின்றி நடைபெற்ற ஆழி பின்னர் பல காரணங்களால் தடைபட்டு பூதப்பாண்டி ஸ்ரீ ராமநாத வாத்யாரின் காலத்தில் வலியானைவட்டத்தில் தொடர்கிறது.

(பெரியபாதையை பெரிதும் மாற்றி அமைத்த காரணத்தால் சென்றமுறை வழக்கமான  பாறையையும் காண முடியவில்லை)

இங்கே பூதநாதரை வணங்கி பானகம் நைவேத்யம் செய்வது வழக்கம்.

இங்கிருந்து சற்றே அருகில் அமைந்திருப்பது இஞ்சிப்பாறைக் கோட்டை. இங்கு சாந்நித்யம் கொண்டிருப்பது தேவி. (த்வரிதா தேவி என்றும் கொள்வதுண்டு)

8 முக்குழி 

இறக்கத்தின் முடிவாக வந்து சேரும் இடம் முக்குழி. சிலர் அழுதை மலை ஏறாமலே அரையக்குடி வழியாக சுற்றி முக்குழி வந்து சேர்வதும் உண்டு. (கல்லிடும்குன்னும், உடும்பாறையும் காணாத காரணத்தால் இது இரண்டாம் பட்சமே என்று கூறுவோரும் உண்டு)

இங்கு பத்ரகாளியின் சாந்நித்யம் உண்டு. இங்கு தேவிக்கு குங்குமார்ச்சனை நடத்தி குருதி படைக்கும் வழக்கமும் உண்டு. இப்போது நல்லதொரு கோவிலும் அமைந்துள்ளது.

இங்கிருந்து ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் நடந்து கொண்டே இருந்தால் அடையுமிடம் கரிவலம் தோடு.

( இன்னும் தொடரும்)

No comments:

Post a Comment