ஜகந்நாதருக்கு வரும் ஜுரம்
இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல் நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு. அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழுகிறோம்.
சொந்த கிராமத்திலிருக்கும் குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மஹாக்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம்.
சிதம்பரத்தில் இருக்கக்கூடிய தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். அதேபோல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள்.
(புரியில் எனக்கு சில உபாஸக நண்பர்கள் உண்டு. அவர்கள் தங்கள் முக்கிய தாந்த்ரீக வழிபாட்டு கேந்திரமாக புரியை உயர்த்திச் சொல்வதுண்டு. ஆனால் அதனால் மட்டும் அது வெறும் சடங்காக மட்டும் விளங்கி, பக்தி பாவத்தை கிஞ்சித்தும் குறைக்கவில்லை என்பதே அதன் தனித்துவ அழகு - அரவிந்த் ஸுப்ரமண்யம்)
நாம் கோகுலாஷ்டமிக்கு மட்டுமே குழந்தையாக க்ருஷ்ணனை பூஜித்து பட்சணங்கள் செய்வோம். ஜகன்னாதபுரியிலோ என்றுமே தங்கள் குழந்தையாகவே அவரைக் கருதுவதால் தான், வேளா வேளைக்கு வித விதமான பலப்பல உணவுகள் அவருக்குப் படைக்கப்பட்டு மஹாப்ரஸாதமாக அளிக்கப்படுகிறது.
இன்று நாம் சளி காய்ச்சல் வந்தால் 14 நாட்கள் தனிமை வாசம், சித்த மருத்துவர்கள் கொடுக்கக்கூடிய மருந்துகள், கஷாயங்கள், தன்னந்தனியாக யாரையும் சந்திக்காமல் இருக்க கூடிய நிலை என்றெல்லாம் க்வாரண்டைன் செய்யும் கொரோனா காலத்தில் வாழ்கிறோம்.
ஆனால் புரி நகரில் வருடா வருடம் கிருஷ்ண பரமாத்மாவான ஜெகநாதனும், அவன் சகோதரனும் சகோதரியும் நோய்வாய் படுகிறார்களாம். நோய்வாய்ப்பட்டவர்கள் இதேபோல் 15 நாட்கள் தனிமைப்படுத்தி குவாரண்டைன் வைக்கும் வைபவமும் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. ஆண்டுதோறும் ஆஷாட மாதம் என்று சொல்லக்கூடிய அவர்களுடைய ஆடி மாதத்தில் உலகப் புகழ்பெற்ற ஜெகன்னாதருடைய ரதோற்சவம் நடைபெறும். (சமீபத்திய ரதோற்சவம்) நமக்கு நினைவிருக்கும்.
அந்தக் காலத்துக்கு முந்தைய 14 நாட்கள் ஜெகநாதன் யாரையும் சந்திப்பதில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா ?
ஆஷாட மாதம் துவங்குவதற்கு முன்பு வரக்கூடிய பௌர்ணமியில் புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அந்த கருவறையில் இருக்கக்கூடிய தெய்வங்களான ஜெகன்நாதனுக்கும் அவருடைய சகோதர சகோதரிகளுக்கும், “தேவ ஸ்நான் பூர்ணிமா” என்று 108 வாளி மூலிகைத் தண்ணீரால் அபிஷேகம் செய்வார்களாம்.
வெயில் காலத்தில் குளிக்காமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிடித்து பச்சைத் தண்ணீரால் அபிஷேகம் செய்வார்கள். ஒரேடியாக செய்தால் என்ன ஆகும் ? குழந்தைகள் மூவருக்கும் ஜுரம் வந்து விடுகிறதாம். அதனால் மூவரும் யாரையும் சந்திக்காமல் 15 நாட்கள் தனியே இருப்பார்கள். அனவாஸர க்ருஹம் எனும் தனி இடத்துக்கு அவர்களைக் கொண்டு சென்று விடுவார்கள்.
கோவில் அர்ச்சகர்களே ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகி ஜெகநாதன் கூடவே இருப்பார்கள். அப்போது அவர்களதுஅந்த காய்ச்சல் குணமாக பத்து மூலிகைகளைக் கொண்டு அழைத்து உருவாக்கிய ’தசமூலம்’ எனும் ஆயுர்வேத மருந்தையும், ’பூலூரி’ என்று சொல்லக்கூடிய வாசனை மூலிகையால் செய்யப்பட்ட எண்ணையும் தருவார்கள்.
வழக்கமான ’சப்பன் போக்’ எனப்படும் பல்சுவை உணவு இல்லாமல் பத்தியச் சாப்பாடு தான் நைவேத்யம். 15 நாட்கள் இந்த நேரத்தில் ஜெகநாதன் யாருக்கும் தரிசனம் கொடுப்பதில்லை, இந்த மருந்துகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு உடல் தேறியபின், ஜகந்நாதர் முதலில் கொஞ்சம் போல கிச்சடி சாப்பிடுவார். பின் வழக்கமான பற்பல உணவுகள் ஆரம்பிக்கும்.
பின்னர் நோயெல்லாம் குணமான பிறகு சுபத்ரையுடனும், பலபத்ரனுடனும் ஜெகநாதர் சந்தோஷமாக தேரிலேறி தேரோட்டத்தை துவங்குவதாக ஐதீகம்.
ஜகத்குருவான சங்கராச்சாரியார் முன்னே வந்து அவனை தரிசனம் செய்வார். புரி நகரின் ராஜா வெள்ளிப் பூண் போட்ட விளக்குமாறு கொண்டு ரதத்தை சுத்தம் செய்வார். பாமரன் பண்டிதன் வித்யாசம் இல்லாமல் அவர்கள் இறைவனின் ரதோத்ஸவத்தை தங்கள் வீட்டு குழந்தைகளின் வரவாகவே உணர்வதே அதன் அழகு.
அதனால் தான் இந்த ஆண்டு தேரோட்டத்தை தடை செய்த போது, அரும்பாடு பட்டு அதனை நிறுத்த சம்மதிக்காமல் பக்திப் பெருக்குடன் நடத்தி விட்டார்கள்.
இது தான் இறைவனுடனான பந்தம் !
குழந்தைகள் நோயெல்லாம் குணமாகி ஆனந்தமாக பவனி வருவதைக் காண லக்ஷோபலக்ஷம் மக்கள், ஏதோ தங்கள் குழந்தைகளே வருவதாக உணர்ந்து வடம் பிடித்து ரதம் இழுப்பார்கள்.
மூத்தவனான பலதேவன் முன்னே செல்ல, குட்டித்தங்கையான சுபத்ரையை பாதுகாப்பாக நடுவே விட்டு, ஜெகந்நாத க்ருஷ்ணன் ஒய்யாரமாக பின்னே வருவான்.
உலகுக்கெல்லாம் நாயகன் - ஜகத்தின் நாதன் தான். அதனால் என்ன ? எங்களுக்கு அவன் குழந்தை தானே ? ஜுரமெல்லாம் குணமாகி, ரதத்தில் ஏறும் முன்பு அந்த குட்டி வாசல் வழியே முட்டைக் கண்களை முழித்துக் கொண்டு அவன் எட்டிப்பார்த்து வெளியே வரும் அழகு ஒன்று போதுமே, இந்த ஜன்மம் கடைத்தேற !
இறைவனை நம்முடன் வாழ்பவனாகவே பார்ப்பது நம் தர்மம். தெய்வீகம் என்பது எங்கோ இருப்பதல்ல ! தெய்வங்களுடனே நாளைத் துவங்கி தெய்வத்துடனே வாழ்வதே நம் ஹிந்து மதம்.
பாரத பூமியின் ஓவ்வொரு அணுவிலும் இந்த தெய்வீகத் தன்மை என்றும் எப்போதும் கலந்தே இருக்கும்
ஜகன்னாத: ஸ்வாமீ நயனபதகாமீ பவது மே !
ஜெய் ஜகந்நாத் ! ஜெய் விமலா!
Aravind Subramanyam