Protected by Copyscape Website Copyright Protection

Thursday, August 5, 2010

தடி கொண்ட ஐயனார்.


உவெசாமிநாதய்யர் எழுதியுள்ள 'நல்லுரைக் கோவை'யில் இந்தக் கட்டுரை காணப்படுகிறது. 

தடி கொண்ட ஐயனார். 

புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற
பெரிய தெரு ஒன்று இருக்கிறது. அது சேஷையா சாஸ்திரிகளால் 
உண்டாக்கப்பட்டது. (சேஷையா சாஸ்திரிகள் பற்றிய இழை 
அகத்தியத்தில் இருக்கின்றது. கொஞ்சம் தேடிப் பார்த்தால் 
அம்புடும். சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 
திவானாக இருந்தவர்.) 



அங்கே, முன்பு ஓர் ஆலமரமும் அதன்கீழே ஐயனார் 
கோயிலொன்றும் இருந்தன. அவ்வையனாருடைய பெயர் 
'தடிகொண்ட ஐயனார்' என்பது. மார்த்தாண்ட பைரவபுரத்தை 
உண்டாக்குவதற்கு முன் அங்கே சாலையை அமைக்கவேண்டியிருந்தது. 
சாலைக்கு முற்கூறிய ஆலமரமும் கோயிலும் தடையாக இருந்தன. 
ஆலமரத்தை வெட்டிவிட்டு, தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் 
கொண்டுசென்று பிரதிஷ்டை செய்துவிட்டால் தாம் உத்தேசித்த 
காரியம் நன்றாக நிறைவேறுமென்று சாஸ்திரியார் எண்ணினார். 
உடனே வேறிடத்தில் அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார். 
ஐயனாரை அங்கே எழுந்தருளச் செய்விப்பதற்கு வேண்டிய 
முயற்சிகளைச் செய்தார். சிலர் அங்ஙனம் செய்தல் தகாதென்று 
தடுத்தனர். 



சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் 
இதைச் செய்கிறேன். ஐயனாரிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் 
பக்திக்கு என்பக்தி சிறிதேனும் குறைந்ததல்ல. என்னுடைய 
முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி 
எனக்குண்டு", என்று அவர்களைப் பார்த்துக்கூறினார். பிறகு 
ஐயனாருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அவர் முன்பு வைக்கச்செய்து 
நமஸ்காரம் செய்தார். 



அதன் சாரம் வருமாறு: 

'கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய 
பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி 
நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம். 
நகரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எழுந்தருளியிருக்கும் 
தேவரீர் இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் 
அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் 
செய்துவருகிறேன். இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் 
உண்டாக்க எண்ணியுள்ளேன். அந்தச் சாலை நேராகச் செல்வதற்கு 
இந்த ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் 
அழகிய கோயிலைக் கட்டச்செய்திருக்கிறேன். நெடுங்காலமாக 
இந்தப் பழைய கோயிலில் மழையால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும் 
எழுந்தருளியிருக்கும் சிரமம் நீங்கி அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். 
இந்த ஆலமரத்தையும் வெட்டுவதையும் அங்கிகரித்து அருளி 
வழிவிடல் வேண்டும்.' 


இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் 
ஐயனாரை அவ்விடம் விட்டு எழுந்தருளச் செய்து புதுக்கோயிலில் 
பிரதிஷ்டை செய்வித்து சிறப்பாகக் கும்பாபிஷேகமும் நடத்திப் 
பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார். அப்பால் ஆலமரத்தை 
வெட்டுவதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார். அதை 
வெட்டினால் ஐயனாரின் கோபம் ஏற்படுமென்று பயந்து கூலியாள் 
யாரும் அதனை வெட்டத் துணியவில்லை. 



"ஐயனாருடைய அருளை எதிர்பார்த்துத்தான் நான் இதைச் 
செய்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் 
வெட்ட ஆரம்பிக்கிறேன்", என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் 
கையில் கோடரியை எடுத்துக்கொண்டார். அவர் மிகப்பருத்த 
தேகமுடையவர். அவர் வெட்டும் காட்சியைப் பார்ப்பதற்காக 
அளவற்ற ஜனங்கள் வந்து கூனி நின்றனர். 
சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை", என்று 
சொல்லிக்கொண்டு கோடரியை ஓங்கினார். 
ஐயனாரிடத்தில் பயங்கொண்ட பல ஜனங்களும் 
சாஸ்திரியாருக்கு ஏதேனும் அபாயம் நேரிடுமென்றே எண்ணினார்கள். 
சிலர், அவர் ஓங்கிய கோடரி அவர் காலிலேயே விழுந்து துன்பத்தை 
விளைவிக்கும் என்று நினைத்தார்கள். வேறு சிலரோ ஆலமரத்திலிருந்து 
குபீரென்று இரத்தம் சாஸ்திரிகளின் முகத்தில் பீரிட்டு அடிக்கும் 
என்று கருதினர். கூட்டத்தினர் கண்கள் அத்தனையும் சாஸ்திரியார் 
ஓங்கிய கோடரியின் பால் இருந்தன. 
சொத்தென்று பச்சை ஆலமரத்தின்மீது கோடரி பாய்ந்தது. 
அபாயமான நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. சாஸ்திரியாருக்குப் 
பின்னும் உற்சாகம் உண்டாயிற்றேயன்றிச் சிறிதும் சோர்வு 
உண்டாகவில்லை. 



'பெரிய பக்திமானும் குணவானுமாகிய சாஸ்திரிகளிடத்தில் 
ஐயனாருக்குக் கோபம் வர நியாயம் இல்லை. சாஸ்திரிகள் தெய்வ 
சம்மதமான காரியத்தையே செய்கிறார்', என்று தம்முள்ளே கூறிக் 
கொண்டனர். 'இவர் வெட்டிவிட்டார். ஐயனார் இவருக்கு உத்தரவு 
கொடுத்திருப்பதால்தான் கோடரி மரத்தில் பாய்ந்தது. இனிமேல் 
இந்த மரத்தை வெட்டத்துணியலாம்.', என்று சிலர் கூறினர். உடனே 
அருகிலிருந்த வேலையாட்கள் சிறிதும் அச்சமின்றி ஆலமரத்தை 
வெட்டிச் சாய்த்தனர். 



ஆலமரம் வெட்டப்பட்டது. அதனால் உத்தேசித்திருந்த 
சாலை ஒழுங்காக அமைந்தது. ஐயனார், புதுக் கோயிலில் பின்னும் 
சிறப்பாக வீற்றிருக்கிறார். அவர் முன்பு இருந்த இடத்தில் ஒரு 
பீடம் மட்டும் இருக்கிறது. அதையும் இப்பொழ்து நகர்வாசிகள் 
பயபக்தியோடு பூசித்து வருகிறார்கள். 


Thanks : treasurehouseofagathiyar

1 comment:

  1. wonderful very interesting. if your intention is noble, lord will be with you. Ayyanaar thunai.

    ReplyDelete