Protected by Copyscape Website Copyright Protection

Thursday, October 10, 2019

ஆலய வழிபாடும் பாரம்பரியமும்

ஆலய வழிபாடும் பாரம்பரியமும்

ஒரு ஆலயத்தின் வழிபாட்டில் பாரம்பரியத்தின் பங்கு என்பதை நாம் மறுக்க முடியாது.

பல கோவில்களில் இன்றைய நிலை கவலைக்கிடம் தான். ஆனால் அதற்கு பூஜகரை மட்டுமே குற்றம் கூறாமல், அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது எது என்பதை கண்டறிய வேண்டும். பாரம்பரிய பூஜகரை மாற்றுவது இறைவனுக்கும் உவப்பில்லை என்பதையும் உணர வேண்டும். அவர்களுக்கு இறைவன் தனிச்சலுகை கொடுத்து அவர்க்ளிடம் வசப்பட்டே சான்னித்யத்துடன் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு சமயம். திருவனந்தபுரம் சென்ற ஸ்ரீ ராமானுஜர் அங்கே சில காலம் தங்கி இருந்து அனந்தபத்மநாபரை சேவித்தார். ஆலயத்திலும் பூஜை முறைகளிலும் அவர் சில மாறுதல்களைச் செய்ய முற்பட்டார். கேரள தாந்த்ரீக பூஜையில் பழக்கப்பட்ட நம்பூதிரிகள் ராமானுஜரின் பாஞ்சராத்ர ஆகமங்களை ஏற்கவில்லை. ஆனால் ராமானுஜரை பகைக்கவும் வழியில்லை. வேறு வழியில்லாமல் பத்மநாப ஸ்வாமியிடமே மனமுருகி முறையிட்டார்கள். “எங்களுக்கு எங்கள் முன்னோர் காட்டிய வழியில் நாங்கள் செய்கிறோம். தயவு செய்து இந்த மாற்றங்கள் வேண்டாம்”

பெருமாளும் பரம்பரை பூஜகர்களின் அன்பில் மயங்கி அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டார். ராமானுஜரிடம் நேரடியாகச் சொல்லவும் அவருக்குத் தயக்கம்.

வேறு வழியில்லாமல் ஒரு உபாயம் செய்தார்: அன்று இரவு திருவனந்தபுரத்தில் படுத்து உறங்கிய ராமானுஜர், மறுநாள் காலை கண்விழித்த போது திருக்குறுங்குடியில் ஒரு கற்பாறை மீது படுத்திருப்பதைக் கண்டார்.! இரவோடிரவாக பெருமாள் அவரை இடம் மாற்றி விட்டார்.

ஆயிரமாண்டுக் கதை என்றாலும் அதிலுள்ள சூட்சுமததை புரிந்து கொள்ள வேண்டும். எது எப்படியானாலும் வழக்கமாக நடந்துவரும் பூஜகரின் பூஜைகள் போதும் என்பதே இறைவன் கருத்து.


சரி இன்றைய கதைக்கு வருகிறேன்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு சம்பவம் சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது.

தென் தமிழகத்தின் ஒரு பிரபலமான சாஸ்தா கோவில். பூஜகர் பரம்பரையாக அங்கே ஆராதனை நடத்திவருபவர் என்ற முறையன்றி பெரிய அளவுக்கு விஷயம் ஏதும் தெரியாதவர். கொஞ்சம் வெள்ளந்தி ஆசாமி. அந்தணரேயானாலும் பெரிய பாண்டித்யமோ அத்யயனமோ செய்யாதவர். கிராம சமுதாயம் கொடுக்கும் 2000 ரூபாய் சம்பளம் போதாது என்று கோவிலுக்கு வரும் எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருப்பார். ஆனாலும் பலநாட்கள் கோவிலில் இவரும் சாஸ்தாவும் மட்டும் தான். யார் வந்தாலும் வராவிட்டாலும் ஏதோ ஒரு நேரம் காலையும் மாலையும் வந்து அன்றைய பூஜையை அவருக்குத் தெரிந்த முறையில் நடத்திவிட்டு சென்று விடுவார்.

”இவருக்கு இந்த சாஸ்தாவைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் என்பது தலையெழுத்து ! சாஸ்தாவுக்கு இவரைக் கட்டிக் கொண்டு அழவேண்டும் என்பது தலையெழுத்து ! ” என்று நாங்களே வேடிக்கையாகச் சொல்வோம்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானமானது. பாரம்பரியம் மிக்க கோவில் என்பதால் பல ஊர்முக்கியஸ்தர்களும் கூடி மிகப்பெரிய பண்டிதர்களை அழைத்து வந்து அமர்க்களப்படுத்தினார்கள். தினமும் பூஜை செய்யும் அர்ச்சகரை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. அவரோ அங்கேயே என்ன செய்வது என்று தெரியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்தார்.

அக்ரஸ்தானத்தில் இருந்தவர் லேசுப்பட்டவர் அல்ல ! தெரியாத விஷயமே இல்லை என்று சொல்லும்படியான பெரும் பண்டிதர். சடங்குகள் துவங்கி, கலாகர்ஷணம் என்று சொல்லப்படும், விக்ரஹத்திலிருக்கும் தெய்வகலையை கும்பத்திலோ, கண்ணாடியிலோ ஆவாஹித்து வைக்கும் கலாகர்ஷணம் எனப்படும் சடங்கு துவங்கியது.

சடங்குகளை செய்த பின்னர் அங்கேயே ஒரு ஜோதிடரை வைத்து ப்ரச்னம் பார்த்து, பகவான் பூர்ணமாக இங்கே எழுந்தருளிவிட்டாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் அடுத்த கட்டத்துக்குப்போவது அந்தப்பகுதி வழக்கம்.

ப்ரச்னம் பார்த்தபோது பண்டிதருக்கு அதிர்ச்சி ! உபாஸக திலகமான தான் ஆகர்ஷணம் செய்தும் ஸ்வாமி இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சமும் அசையவில்லை. மீண்டும் சடங்குகள் துவங்கின.. இப்படியே மூன்று நான்கு முறை முயற்சித்தும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிவிட்டது. ஒன்றும் அசையவில்லை.

நொந்து போன பண்டிதர் கொஞ்சம் கழித்துத் துவங்குவோம் என்று எழுந்திருக்கவும் வழக்கமாக பூஜை செய்யும் அர்ச்சகர் வந்து சேர்ந்தார்.

”என்ன ஆச்சு ? ஒண்ணும் நடக்கலியோ” என்றார் வெள்ளந்தியாக.

நீயே வேண்டுமானாலும் முயற்சிப்பண்ணிப்பாரேன், என்று கேலி பாதியும், இயலாமை பாதியுமாக அங்கிருந்தோர் கூறினார்கள்.

இவரும் பகவான் முன் சென்று “ ஓய் ! ரொம்ப நாழியாறதே.. எல்லாரும் சாப்பிடப் போகாம உக்காந்து இருக்கா... சீக்கிரம் இங்க வாருமே” என்று ஸ்வாதீனமாகச் சொல்லிக் கொண்டு அவருக்கு தெரிந்த பாணியில் மந்திரங்களை எப்படியோ சொல்லி பகவானிடமிருந்து புஷ்பங்களை எடுத்து இங்கே கும்பத்தில் போட்டார்.

மறு நொடி ப்ரச்னத்தில் தெளிவு வந்து விட்டது. ”ஸ்வாமி இங்கே எழுந்தருளிவிட்டார்” என்று.

365 நாளும் பகவானை ஆராதிப்பவருக்கு - அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், பகவான் ஒரு சிறப்பு ஸ்தானத்தைக் கொடுக்கவே செய்கிறான்.

பூந்தானத்தின் பக்தி பட்டதிரியின் விபக்தியை விட உயர்ந்தது என்றான் குருவாயூரப்பன்.

பாரம்பரியத்துக்கு என்றுள்ள தனித்துவத்தை மற்றவை அளிக்க முடியாது. உதாரணமாக கேரளத்தின் வேட்டைக்கொருமகன் பூஜையில் ஆவேசம் கொள்ளும் வெளிச்சப்பாடு குடும்பத்தைச் சேர்ந்தவர் கண்மூடி அமர்ந்து இரண்டரை மூன்று மணி நேரத்தில் 12000 தேங்காய்களை இரண்டு கைகளாலும் உடைத்து விடுகிறார். இது பரம்பரையின் விசேஷத்தால் வரமுடியுமேயன்றி பயிற்சியளிக்க முடியுமா ?

இன்றைய காலகட்டத்தில் ஒரு காலனியிலுள்ள விநாயகர் ஆலயத்தில் தொந்தரவு இல்லாமல் ஒரு பூஜையை செய்வதே பெரும்பாடாக இருக்கிறது. அப்படியிருக்க தலைமுறை தலைமுறையாக பகவானுக்காக தொண்டு செய்பவர் கொஞ்சம் முன்பின்னாக இருந்தாலும் குறை கூறாமல், அவர்களை அந்நிலைக்கு ஆளாக்கும் root-causeஐ நேராக்க முயல்வோம்.

ஏதோ செய்யப்போய் கடைசியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சநஞ்ச சான்னித்யத்தையும் காலிபண்ணிவிடப் போகிறது என்பதே என் பயம்.

அனுதினமும் நாம் குளிப்பாட்டும் குழந்தைக்குக் கூட ஒருநாள் ஆள் மாற்றி குளிப்பாட்டினால் சளிப்பிடிக்கும். அதுபோலத்தான் பகவானும் தலைமுறை தலைமுறையாக அவனை ஆராதித்தவர் இன்று ஏதோ செய்யும் சிறிய தவறுகளை இறைவனே பொறுத்துக் கொண்டு அருளும் போது, அவனை மாற்று, வேறு ஆளைப் போடு என்றெல்லாம் குறை சொல்ல நாம் யார்?