Protected by Copyscape Website Copyright Protection

Monday, October 31, 2011

ஆரிய கேரள வர்மன் - ஒரு வரலாற்று நாயகன் ஐயப்பனின் கதை

ஆரிய கேரள வர்மன் - ஐயப்பனின் கதை 

பக்தர்கள் ஐயப்பனைக் காண சபரிமலைக்கு படையெடுக்கும் நேரம் துவங்கிவிட்டது. (ஐயப்ப சீசன் என்கிற வார்த்தையை நான் ஒப்புக்கொள்வதில்லை. இறைபக்தி என்பது எப்போதும் மனதில் இறைவனை எண்ணுவது; அது என்ன குற்றால சீசனா? வருடத்தில் சில நாட்கள் மட்டும் இருப்பதற்கு)

விரத முறைகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்களா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, சபரிமலையின் தாக்கத்தில் உண்டான நன்மைகள் பலப்பல! ஆனால் மிக சௌகர்யமாக மறக்கப்பட்ட ஒரு நபர் ஐயப்பன் ! ஆம் ! நீங்கள் நினைக்கும் சுவாமி ஐயப்பன் இல்லை. அவர் வேறு! அதே கடவுளின் பெயரில் பின்னாளில் வாழ்ந்து சபரிமலையை இன்று நமக்கு மீட்டுக் கொடுத்த ஒரு மாவீரன், ஒரு யோகி உண்டு; அவரும் ஐயப்பன் தான். சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தனும் அறிந்திருக்க வேண்டிய வரலாறு இது.

மீண்டும் சொல்கிறேன்... இவர் நாம் முன்னரே கேட்டுள்ள மணிகண்டன் இல்லை. மணிகண்டனின் காலம் ரொம்பவும் முற்பட்டது. ஐயப்பன் வரலாற்று நாயகன். காலச்சுழற்சியில் காணமல் போய், மிக சமீபகாலத்தில் சில ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டவர். இன்று நமக்கு சபரிமலை தர்ம சாஸ்தா கோவில் மீண்டும் கிடைப்பதற்கு காரணமானவர். பலருக்கும் இவரைப்பற்றி அதிகம் தெரியாது.

கதையை கவனமாக படியுங்கள்... இந்த வரலாற்றில் காணப்படும் வாவரைத்தான் புராதனமான வரலாற்றில் இணைத்து குழப்பி விட்டது புரியும்.

பலகாலமாக நான் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியின் விளைவாக கண்டறிந்த உண்மைகளை, ஐயப்பனை - ஆர்ய கேரள வர்மனை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


பக்தபரிபாலனின் பாத ஸ்மரணத்துடன்
V. அரவிந்த் சுப்ரமண்யம்

------------------------
சபரிமலை தர்ம சாஸ்தா

சாஸ்தா வழிபாடு என்பது பாரத தேசத்தில் மிகத் தொன்மையான ஒன்று. தென்னகத்தில், குறிப்பாக தமிழகத்திலும் மலையாள தேசத்திலும் அது இன்னும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சாஸ்தா கோவில்கள் இங்கு சர்வ சாதாரணம்; ஹரிஹரபுத்திரன் என்று புராணங்கள் குறிப்பிடும் இந்த பரம்பொருள், ஒரு தெய்வீக லீலையின் காரணமாக "மணிகண்டன்" என்ற பெயருடன் பூமியில் தோன்றி, பாண்டிய மன்னனால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பாண்டிமாதேவியின் தலைவலிக்காக புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்று, மஹிஷி எனும் அரக்கியை வதைத்து, புலிக்கூட்டங்களை கூட்டி வந்து, இறுதியாக சபரிமலை எனுமிடத்தில் யோக பீடத்தில் அமர்கிறார்.

இது ஓர் புராண நிகழ்வு; இதன் பின்னர் சபரிமலையில் கோவில் கொண்ட தர்மசாஸ்தாவை மக்கள் பயபக்தியுடன் வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

பந்தளம் அரச வம்சம்

இப்படியாக பன்னெடுங்காலம் உருண்டோடிய காலத்தில் பந்தளம் (பத்ம தளம்) ராஜ வம்சம் கி.பி. 904 -ல் உருவானது. மதுரையில் நிலை கொண்ட பாண்டிய அரசர்கள், சோழர்கள் மற்றும் பல எதிரிகளின் தாக்குதல்களால் சிதறுண்டு, அதில் ஒரு பகுதி, தங்கள் ராஜ்ய விசுவாசிகள் வலுவாக இருந்த தென்பாண்டி - கேரள எல்லைகளில் குடியேறினார்கள்.
பந்தளம் அரண்மனையில்
கட்டுரை ஆசிரியர் அரவிந்த் ஸுப்ரமண்யம்

செங்கோட்டை, இலத்தூர், பூஞ்சார், பந்தளம் ஆகிய இடங்களில் பாண்டிய ராஜ வம்சம் குடியேறியது. தங்கள் பாண்டிய வம்ச திலகமாக விளங்கிய சபரிமலை சாஸ்தாவையே அண்டி ஒரு கிளை உருவானது. பத்து பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியமாக அது விளங்கியதால், பத்து தாமரை இதழ்களை உருவகித்து, பத்ம தளம் என்ற பெயர் அதற்கு விளங்கியது. இதுவே பின்னாளில் பந்தளம் என்றானது.

சபரிமலை சாஸ்தாவைப் போற்றி உருவான பாண்டிய ராஜ பரம்பரை நாளடைவில் பந்தள ராஜ வம்சம் என்றே அறியலாயிற்று.

இதன் பின்னரே நான் குறிப்பிட்ட சுவாரஸ்யமான திருப்பங்களும், மர்மங்களும் அரங்கேறலாயிற்று.


சபரிமலைக் கோவிலின் அழிவு

பத்தாம் நூற்றாண்டு சமயத்தில் தென் தமிழக கேரளப் பகுதிகளில் குழப்பான சூழ்நிலையே விளங்கியது. சபரிமலை, அச்சன்கோவில் பகுதிகளே அன்றையெ தமிழக - கேரள எல்லைப்பகுதியாகவும், வியாபாரிகள் செல்லும் முக்கியமான வழியாகவும் இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்களெல்லாம் உதயணன் என்றொரு கொள்ளையனை பயந்து வாழவேண்டிய நிலை உருவானது. எல்லைப்பகுதிகளைக் கடக்கும் மக்களை தாக்கி கொலை கொள்ளைகளை சர்வசாதாரணமாக நடத்தி வந்தான் உதயணன். அவனுக்கென ஒரு கொள்ளைக் கூட்டமும் உருவானது. தமிழக எல்லையில் தொடங்கிய அவனது கொட்டம், மெல்ல மெல்ல கேரளத்துக்குள் புகுந்து, தலைப்பாறை, இஞ்சிப்பாறை, கரிமலை என பந்தளத்தின் காடுகளில் கோட்டையை கட்டிக் கொண்டு காட்டரசனாக வாழுமளவுக்கு முன்னேறியது.

சுற்றியுள்ள கிராமங்களை அவ்வப்போது தாக்கி கொள்ளையிடுவது வாடிக்கையானது. சபரிமலை தர்மசாஸ்தா கோவில் - அப்போது தமிழக - கேரள பக்தர்கள் இருசாராரும் வந்து வழிபடும் கோவிலாகவும், வியாபாரிகள் தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பாதையாகவும் விளங்கியது. வெற்றி போதை தலைக்கேறிய உதயணன், சபரிமலையிலும் தன் வெறியாட்டத்தை நடத்தி கோவிலைக் கொள்ளையிட்டான். அதனை தடுக்க வந்த நம்பூதிரியையும் கொன்று, சாஸ்தா விக்ரஹத்தையும் உடைத்து நொறுக்குகிறான். வெறி தலைக்கேற, கோவிலையும் தீக்கிரையாக்குகிறான்.

இந்த சமயத்தில் அங்கே இல்லாமல் வெளியே போயிருந்த அந்த பூஜாரியின் மகன் ஜயந்தன் நம்பூதிரி அங்கே திரும்பி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. இந்த கொடூர சம்பவங்களைக் கண்டு கொதித்த ஜயந்தன், உதயணனை பழிவாங்கவும், மீண்டும் சபரிமலைக் கோவிலை உருவாக்கவும் சபதம் மேற்கொண்டான்.

தன் சபதத்தை நிறைவேற்ற போர்க்கலைகளை வெறியுடன் கற்றறிந்தான் ஜயந்தன். சுற்றியுள்ள பல சிற்றரசர்களையும், ஜமீந்தார்களையும் கண்டு உதயணனின் கொட்டத்தை அடக்க படைகளை கொடுத்து உதவுமாறு வேண்டினான். ஆனால் உதயணனுக்கு பயந்து யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த ஜயந்தன், யாராலும் எளிதில் அடைய முடியாத, பொன்னம்பல மேடு பகுதியில் ஒரு குகையில் வசிக்கலானான். மனிதர்கள் கைவிட்டு விட்ட நிலையில் தன் முயற்சிக்கு உதவ வேண்டி சாஸ்தாவை நோக்கி தவமிருந்தான்.


இளவரசியை கடத்தல்

சபரிமலை கோவிலையே தரைமட்டம் ஆக்கிவிட்டதனால் தலைகால் புரியாத உதயணன், தன்னைத் தானே ஒரு அரசன் என்று கருதிக் கொண்டான். ஒரு முறை பந்தளம் பகுதிக்கு வந்த அவன், அந்நாட்டி இளவரசியைக் கண்டான்; இளவரசியை மணந்து கொண்டால், வெறும் கொள்ளைக்கூட்டத் தலைவனான தான், அரச பரம்பரையில் இணையலாம் என்ற எண்ணத்தில் இளவரசியை பெண் கேட்டு ஆள் அனுப்பினான். ஆனால் பந்தள மன்னர் அதனை கௌரவமாக மறுத்து விட்டார். இதனால் அவமானமுற்ற உதயணன், அரண்மனையைத் தாக்கி, இளவரசியையும் கடத்திக் கொண்டு சென்று விட்டான். அவளை கரிமலையில் உள்ள தன் கோட்டையில் சிறை வைத்து, ஒரு மாதத்துக்குள் மனத்தை மாற்றிக் கொள்ளும்படி கெடுவைக்கிறான்.

இந்நிலையில், சிறைபட்டிருந்த இளவரசியில் கனவில் தர்மசாஸ்தா தோன்றி, கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். அதே சமயம் பொன்னம்பல மேட்டில் தங்கியிருந்த ஜயந்தனின் கனவிலும் தோன்றி, இளவரசியைக் காப்பாறுமாறும், அதன் பின்னர் தனது சக்தியே அவனுக்கு மகனாக தோன்றி அவன் லட்சியத்தை நிறைவேற்றும் என்றும் கூறுகிறார்.

இந்த கொள்ளைக் கூட்டம் அசந்திருந்த நேரம் பார்த்து திடீரென தாக்குகிறான் ஜயந்தன். போர்க்கலையில் வல்லவனான ஜயந்தன் எளிதில் இளவரசியை காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறான். ஆனால் 21 நாட்கள் காணாமல் போன ஒரு பெண்ணை, இறந்தவளாகக் கருதி அரண்மனையில் இறுதி சடங்குகளை முடித்து விடுகிறார்கள். வேறு வழியில்லாத ஜயந்தன், தானே அவளை மணந்து கொண்டு, யாராலும் அடையாளம் காண முடியாத காட்டுப் பகுதியில்(இன்றைய பொன்னம்பலமேடு) வசிக்கிறார்கள். கடும் தவமும், த்யானமும் கொண்ட தம்பதிகளின் மனதில் எப்போதும் ஒரே எண்ணம் தான். உதயணனை அழித்து, சபரிமலைக் கோவிலை மீண்டும் உண்டாக்கும்படியான ஒரு மகனை அளிக்கும்படி தர்மசாஸ்தாவை வேண்டியபடியே இருந்தார்கள்.

ஆர்யனின் பிறப்பு


விரைவில் இளவரசி கருவுற்றாள். மிகச் சரியாக 14-01-1095ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. சபரிமலை ஐயப்பனின் அருளால் பிறந்த குழந்தை என்பதனால், அக்குழந்தைக்கு "ஆர்யன்" என்ற பெயர் சூட்டினார்கள். (ஆர்யன் என்பது சாஸ்தாவின் நான்கு முக்கியமான பெயர்களில் ஒன்று; மரியாதைக்குரியவன் என்று பொருள்). தன் லட்சியத்தை நிறைவேற்றப் போகும் தவப்புதல்வன் என்ற எண்ணத்தில் ஜயந்தன், மிகச்சிறிய வயதிலேயே தன் மகனுக்கு ஆன்மீகம், அரசியலோடு, போர்க்கலைகளையும் கற்றுக் கொடுத்தான். ஆச்சர்யப்படும் விதத்தில், பாலகனான அச்சிறுவன் ஆன்மீக அறிவில் அபரிமிதமான ஞானத்துடனும், அதே சமயம் சண்டைப்பயிற்சியில் வெல்ல முடியாத வீரனாகவும் விளங்கினான். ஆர்யன் ஒரு சாமான்ய பிறவியல்ல என்பதை அவன் தாய் தந்தையர் வெகு விரைவில் உணர்ந்து கொண்டார்கள்.


இனியும் அவனை இந்த காட்டில் வைத்திருப்பது சரியாகாது என்று முடுவெடுத்த ஜயந்தன், பந்தள மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதி, ஆர்யனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். ஆர்யனின் மாமனான பந்தள மன்னன், கடிதத்தில் வாயிலாக எல்லா உண்மைகளையும் அறிந்தான். இறந்து விட்டதாக கருதிய தன் சகோதரி இன்னும் உயிருடன் இருப்பதையும், அவள் பிள்ளை கண்முன் வந்திருப்பதையும் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டான். ஆர்யனின் தோற்றப் பொலிவே அபாரமாக இருந்தது; யாருக்கும் அவன் சிறுவன் என்ற எண்ணமே தோன்றவில்லை. மாறாக மரியாதையே ஏற்பட்டது. அரண்மனையிலேயே தங்கிய ஆர்யன், அரண்மனை வீரர்களையும் மல்லர்களையும் சர்வசாதாரணமாக வென்றது மன்னரிடத்தில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. தன் படையின் முக்கியமான தலைமைப் பொறுப்பினை ஆர்யனுக்குக் கொடுத்தான் மன்னன்.

ஆர்யன் - கேரள வர்மன் 

அரண்மனையின் வளர்ந்து வந்த ஆர்யன், தன் செயற்கரிய செயல்களால் அனைவர் மனத்தையும் வென்று விட்டான். அரசனும், தனக்கு பிறகு பந்தள நாட்டை ஆளும் தகுதி ஆர்யனுக்கே உள்ளது என முடிவு செய்து, அவனையே இளவரசனாக அடையாளம் காட்டினான். அரச ப்ரதிநிதியாக நாட்டை ஆளும் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் ஆர்யனுக்கே அளித்தான். அத்துடன் அரச அதிகாரம் கொண்டவன் என்ற முறையில் "கேரள வர்மன்" என்ற அரச பட்டத்தையும் அளித்து, "ஆர்ய கேரள வர்மன்" என்று போற்றினான். மக்கள் அனைவருக்கும் எளியனாக விளங்கிய ஆர்யனை, எல்லோரும் ஐயன் - ஐயப்பன் என்றே செல்லமாகவும், மரியாதையாகவும் அழைத்தார்கள். (இது ஏற்கனவே சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தாவின் மற்றொரு பெயர்தான். அந்த காலகட்டத்தில் ஐயப்பன் என்பது ஒரு செல்லப்பெயர்)

அரசாட்சியில் முழுமையாக ஈடுபட்டு நாட்டை செம்மை படுத்திய ஐயப்பன், அவ்வப்போது சபரிமலைக் காட்டுக்குத் தனிமையை நாடிச் சென்று, தன் பிறவியின் லட்சியத்தை எண்ணி த்யானம் செய்து பொழுதை கழிக்கலானார்.

ஆபத்தில் காப்போன்


பாண்டிய அரச பரம்பரையின் மற்றொரு கிளை வம்சமான பூஞ்சாறு ராஜ்ய வம்சத்து அரசனான மானவிக்ரம பாண்டியன், வண்டிப்பெரியாறு வனப்பகுதிக்கு வந்த போது, உதயணனின் படை மானவிக்ரமனைச் சூழ்ந்து கொண்டது. தன்னால் ஆனமட்டும் போராடிய மானவிக்ரமன், ஒரு கட்டத்தில் ஏதும் செய்ய முடியாமல், மீனாட்சியம்மனை வேண்டி நின்றான். வெகு விரைவிலேயே, அவன் வேண்டுதல் பலித்ததைப் போல ஒரு இளைஞர் யானை மேல் வந்து கொண்டிருந்தார். வனத்தில் திரிந்து கொண்டிருந்த காட்டானை ஒன்றை அடக்கி அதன் மேல் வந்து கொண்டிருந்தது -  ஐயப்பன் தான். தன் அநாயாசமான போர் திறமையால் கொள்ளையர்களை விரட்டியடித்த ஐயப்பன், மானவிக்ரமனை காப்பாற்றினார். மீண்டும் தைரியமாக அரண்மனைக்கு செல்லும்படி கூறிய ஐயப்பன், அரசனுக்கு துணையாக, தன் ப்ரதிநிதியாக ஒரு பிரம்பு- வடியை கொடுத்து அனுப்பினார்.  (இன்றும் பூஞ்சாறு ராஜ வம்சம் இதனை ஒரு பொக்கிஷமாக காப்பாற்றுகிறார்கள்)


இப்படியாக பதினான்கு வயதுக்குள் ஐயப்பன் தான் ஒரு போர்வீரனாகவும், யோகியாகவும் விளங்கி தான் சாதாரணமான மனிதனல்ல என்று உணர்த்திவிட்டார். எனவே தன் பிறவி லட்சியத்தை நிறைவேற்ற வேளை வந்துவிட்டதை உணர்ந்தார். உதயணனை அழிக்கவும், சபரிமலை கோவிலை மீண்டும் உருவாக்கவும் - பந்தளத்தின் படைபலம் போதாது; எனவே பெரும் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார் ஐயப்பன். நாட்டின் குடிமக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒருவரை போருக்கு அனுப்ப அறைகூவல் விடுத்தார்.

லட்சியம்

ஐயப்பனின் லட்சியம் மிகத் தெளிவாக இருந்தது:
- உதயணனின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டுவது;
- மக்களுக்கு நிம்மதியான வாழ்வினை அளிப்பது;
- எரிந்து போன சபரிமலைக் கோவிலை மீண்டும் உருவாக்குவது.

இதற்காக அண்டை நாடுகளுக்கும் சென்று ஐயப்பன் படை திரட்ட முடிவு செய்தார். காயங்குளம், அம்பலப்புழை, சேர்த்தலை, ஆலங்காடு போன்ற கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பாண்டிய நாட்டின் உதவியையும் வேண்டி ஐயப்பன் பயணம் செய்ய திட்டமிட்டார்.

முதன் முதலில் ஐயப்பன் காயங்குளம் அரண்மனைக்கு சென்றார். காயங்குளம் அரசர், தான் தினம் தினம் கேள்விப்படும் தெய்வப்பிறவியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் மெய்மறந்து நின்றார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார் மன்னர். காயங்குளம் ராஜ்யத்திலிருந்த பல களரி வீரர்களையும், போர் வீரர்களையும் கொண்டு ஐயப்பன் ஒரு போர்ப்படையை தயாராக்கினார்.


படை பலம்

ஐயப்பன் காயங்குளத்திலிருந்து கிளம்புமுன்பே ஒரு தூதன் வந்து, கடல் கொள்ளையனான வாவர் என்பவனின் தொல்லைகளைப் பற்றி எடுத்துரைத்தான். இதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயப்பன், உற்சாகமாக போருக்கு கிளம்பினார். முல்லசேரி என்ற குடும்பத்தின் தலைவனாக விளங்கிய கார்னவர்(தலைவர்), காயங்குளத்தின் மந்திரியாகவும் விளங்கிய அவர் ஐயப்பனுக்கு துணையாக புறப்பட்டர். நடந்த சண்டையில் வாவரை வென்றார் ஐயப்பன். வாவரின் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வென்றது ஐயப்பனின் பண்பு. வாவரை நல்வழிப்படுத்தி தன் சீடனாகவும், தோழனாகவும் ஏற்ற ஐயப்பன், வெகு விரைவில் படைகளை திரட்டலானார். 

புல்லுக்குளங்கரா என்ற இடத்தில் தன் முதல் போர்ப்படை கூட்டத்தை கூட்டி, படை வீரர்களிடையே சொற்பொழிவாற்றினார். (இந்த இடமும் இன்னும் இருக்கிறது)

இதே போல அம்பலப்புழை சேர்த்தலை போன்ற ஊர்களிலும் படைகலை திரட்டினார். நாட்டில் எங்கெங்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு கட்டுப்பட்டு வந்தார்கள். மலைகளில் புகுந்து தாக்குவதில் வல்லவனான கடுத்தன் என்ற வீரனிடம்  ஐயப்பனின் பார்வை பட்டது. பலமுறை உதயணனைத் தாக்கி, சிறைபட்ட பல மன்னர்களை மீட்டுள்ள கடுத்தனை தன் லட்சியத்துக்கு துணையாக அழைத்தார் ஐயப்பன். 

அதே போல வில் வித்தையில் சிறந்து விளங்கிய ராமன் - க்ருஷ்ணன் என்ற இருவரும் (தலைப்பாறை வில்லன் - மல்லன்) ஐயப்பனுக்கு துணை நின்றார்கள்.

யுத்த ஆயத்தம்

சேர்த்தலை எனும் ஊருக்கு வந்த ஐயப்பன், அங்கே களரி எனும் யுத்தப்பயிற்சி தந்த சிறப்பன்சிறா மூப்பன் என்பவரை சந்தித்து அவரது ஆதரவையும் பெற்றார். மூப்பனின் மகள், கட்டிளம் காளையான ஐயப்பன் மேல் காதல் கொண்டாள். இதனை அறிந்த ஐயப்பன் அவளிடம் தன் வாழ்கை லட்சியத்தை எடுத்துரைத்து அவள் மனதை மாற்றினார். யோகியான ஐயப்பனின் அறிவுரை அவளை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தியது. இதற்கிடையில் ஐயப்பனின் படைபலம் பெருகிக்கொண்டே வந்தது.

உதயணனுக்கு எதிராக, ஐயப்பன் தன் படைகள் முழுவதையும் எருமேலியை நோக்கி திரட்டினார். எருமேலியிலிருந்து வாவரின் தலைமையில் முதல் தாக்குதல் துவங்கியது. ஆனால் து எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உதயணன் மூப்பனின் பெண்ணை தந்திரமாக கடத்திக் கொன்றுவிட்டான். உடனடியாக தன் படைகள் முழுவதையும் திரட்டிய ஐயப்பன், படைவீரர்கள் அனைவருக்கும் எருமேலி முதல் சபர்மலை வரையிலான மலைகளின் மகத்துவத்தை உரைத்தார். முறையான விரத அனுஷ்டானம் இல்லாமல் சாஸ்தாவின் பூங்காவனத்துக்குள் செல்லக் கூடாது என கட்டளையிட்டார்.

ஐயப்பனின் கட்டளைப்படி படைவீரர்கள் அனைவரும் 56 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டார்கள். இதன் பின்னர் அனைவரும் மீண்டும் எருமேலியில் கூடினார்கள். தங்கள் வெற்றிக்காக கிராத சாஸ்தாவை வழிபட்ட ஐயப்பன், போர்ப்படைகளை வழிநடத்தலானார். தாக்குதல் குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, காட்டுவாசிகளைப் போல வேடமிட்டு யாவரும் செல்லலானார்கள். (இன்றைய பேட்டை துள்ளல்; அன்று கடைசியாக வந்த ஆலக்காட்டு படையின் நினைவாக இன்றும் ஆலங்காட்டு பேட்டை துள்ளலே கடைசி பேட்டை துள்ளல்)

உதயணனைத் தாக்கும் முன்பு போர்ப்படைகளை மூன்றாக பிரித்தார் ஐயப்பன்.

1. ஆலக்காட்டு படைகளை வாவரின் தலைமையிலும்
2. அம்பலப்புழை படைகளை கடுத்தனின் தலைமையிலும்
3. பந்தளப்படைகளை வில்லன் - மல்லன் இருவரின் தலைமையிலும் அணிவகுத்தார்.

மூன்று படைகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஐயப்பன் தானே ஏற்றார். உதயணனின் இருப்பிடத்தை கிழக்கு, வடக்கு தெற்கு என மூன்று பக்கங்களிலிருந்தும் வளைக்கலானார்கள்.

லட்சியம் வென்றது

எருமேலியிலிருந்து பூங்காவனத்துக்குள் நுழைந்தது முதலாகவே ஐயப்பன் முற்றிலும் வேறொரு நபராக காட்சியளித்தார். அவரது தோற்றமே மிகப் பொலிவுடன் காணப்பட்டது; முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ  மிக அமைதியான கோலத்துடன், அதே சமயம் ஆனந்தக் கோலத்துடன் முன்னேறினார். ஐயப்பன் ஒரு ஆயுதத்தையும் கையால் கூட தொடவில்லை; அவர் முன்னேற முன்னேற அவரைத் தொடர்ந்து சென்ற படைகளும் எதிரிகளை எளிதாக வீழ்த்தி வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறியது. 

உதயணனின் கொள்ளைப்படைகளின் கூடாரமாக இருந்த இஞ்சிப்பாறை, கரிமலை, உடும்பாறை ஆகியவை வெகுவிரைவிலேயே ஐயப்பன் படையின் வசமானது. 

ஐயப்பனின் வீராவேசமான படைகளுக்கு முன் உதயணனின் படைகளால் நிற்கவே முடியவில்லை. ஐயப்பனின் படை வெகு வேகமாக முன்னேறி உதயணனின் படைகளை தவிடுபொடியாக்கியது. இறுதியாக கரிமலைக் கோட்டையில் தஞ்சம் புகுந்தான் உதயணன். கடுமையானதொரு யுத்தத்துக்குப் பிறகு கடுத்தன் ஆக்ரோஷமாக முன்னேறி உதயணனின் கழுத்தை வெட்டி வீழ்த்தினான். ஐயப்பனின் லட்சியம் நிறைவேறியது. 

பல்லாண்டுகால போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு படைகள் முழுவதும் ஆனந்தமாக பம்பையாற்றங்கரையில் கூடினார்கள். ஐயப்பன் அங்கு, போரில் இறந்த அனைவருக்கும் இறுதிச்சடங்குகள் செய்து தர்ப்பணம் செய்யச் சொன்னார். எதிரியே ஆனாலும், உதயணனின் ஆட்களுக்கும் தர்ப்பணம் செய்யப்பட்டது.

மேற்கொண்டு படைகள் அனைவரும் நீலிமலையைக் கடந்து செல்லத்துவங்கினார்கள். அப்போது அனைவரையும் நிறுத்திய ஐயப்பன், ஆலயப்பகுதிக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக்கூறி, அம்பு, கத்தி, கதை என எல்லா ஆயுதங்களையும் ஓர் ஆலமரத்தின் கீழே வைத்துவிடச் சொன்னார். (பண்டைய சரங்குத்தி ஆல்)


வீர விளையாட்டின் முடிவு

பந்தளம் அரண்மனையில்
கட்டுரை ஆசிரியர்
அரவிந்த் ஸுப்ரமண்யம்

பின்னர் ஐயப்பனும் மற்ற படை வீரர்களும் சபரிமலை கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே அவரது தந்தை ஜயந்தனும் மற்றவர்களும் புதிய விக்ரஹத்துடன் காத்திருந்தார்கள். சபரிமலையை அடைந்ததும் ஐயப்பன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பூரண மௌனத்தில் ஆழ்ந்திருந்தார். ஆலய நிர்மாணம் முடிந்து ப்ரதிஷ்டைக்கு தயாராகும் வரை ஐயப்பன் ஓரிடத்தில் அமர்ந்து த்யானத்தில் ஆழ்ந்திருந்தார்(இன்றைய மணிமண்டபம்) தனுர்மாதம் (கார்த்திகை) முடிந்து தைமாதம் துவங்கும் வேளையில் புதிய விக்ரஹம் ப்ரதிஷ்டை செய்ய வேளை குறிக்கப்பட்டது. புதிய ப்ரதிஷ்டையை ஐயப்பன் தானே தன் கையால் நடத்தினார்.  பக்தர்கள் பரவசத்துடன் இதனை தரிசித்துக் கொண்டிருக்கும் வேளையில், பொன்னம்பல மேட்டில் ஓர் ஒளி தோன்றியது. மறு கணம், ஆலயத்துள்  ஆர்ய கேரள வர்மனைக் காணவில்லை. இத்தனை நாள் தங்களுடன் இருந்த தங்கள் அன்புள்ள, பாசமுள்ள, கருணையுள்ள இளவரசன்  -ஆர்யன் ஐயப்பன்- சாக்ஷாத் அந்த ஐயப்பனே ! என்று உணர்ந்து மெய்மறந்து சரண கோஷம் செய்தார்கள். 

பந்தளம் ராஜ வம்சம், பூஞ்சார் அரண்மனை, மற்ற பல குடும்பங்கள் இன்றும் இந்த வரலாற்றுக்கு சான்றாக இருக்கிறார்கள். பல பொருட்களும், இடங்களும், பாடல்களும் இன்னும் கண்முன் இருக்கத்தான் செய்கிறது. 

ஸ்வாமியே சரணம் ஐயப்பா !!!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா !!!
ஐயப்பன் பயன்படுத்திய வாள்
புத்தன் வீடு எருமேலி 
ஐயப்பன் பூஜை செய்த 
விக்ரகங்கள் 
பந்தளம் அரண்மனை


ஐயப்பன் களரி பயின்ற 
சிறப்பன் சிரா, சேர்த்தலை 



ஸ்வாமியே சரணம் ஐயப்பா !!!

18 comments:

  1. அற்புதம். மிக்க நன்றி. மிக முக்கியமான அபூர்வமான தகவல்.

    ReplyDelete
  2. அருமை....சாஸ்தாவின் மகிமையைக் கண் முன்னே நிறுத்தியமைக்கு நன்றி பல...எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் அளிக்க மனப்பூர்வமாய் வேண்டுகிறேன்...

    -MCE

    ReplyDelete
  3. மிக நல்ல பதிவு ... நீங்கள் தமிழில் தொடர வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  4. மிக அருமை, என்னைப்போல இன்னும் அயப்பனை காண பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அய்யப்பனை நேரில் பார்த்தது போல் உள்ளது. நன்றி.

    ReplyDelete
  5. மிக அரிதான தகவல்களைத் தொகுத்து, நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  6. Most of us are not aware of these facts...Thanks for your effort.

    ReplyDelete
  7. wonderful piece of information.almost matches
    with the history, which is known to devotees of LORD AYYAPPA.Expecting such interesting facts about divinity.

    ReplyDelete
  8. Thank you very much for giving this real stroy of our god.

    ReplyDelete
  9. SWAMIYE SARNAM AYYAPPAA.... THANKS

    ReplyDelete
  10. Awesome. Thanks a lot for your great efforts..

    ReplyDelete
  11. Migavum nanraga ullathu, Idhai patithathil naan pakkiyam petran. anal Shivanukkum Moginikkum Iyyappan Piranthan andru sollappadum puranam pattri sollunkal..

    ReplyDelete
  12. மிக அரிதான தகவல்களைத் தொகுத்து, நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  13. Iyanin maghimaiyae maghimai

    ReplyDelete
  14. thanks for giving opportunity to realize lord ayyappa..
    really very useful to us..

    ReplyDelete
  15. NANRI MIKKA NANRI MIGA THELIVAANA UNMAIYAANA VARALAARU PADAITHAMAIKKI

    ReplyDelete