Thursday, October 31, 2013

எருமேலியில் உள்ளது யார்? (வாபுரனும் வாவரும்)

சபரிமலை யாத்திரையில் முக்கியமானதொரு கேந்த்ரம் எருமேலி; உலகின் எந்த பகுதியிலிருந்து வரும் பக்தர்களும் ஒன்று கூடும் இடம். இங்கிருந்து தான் யாத்திரையின் முக்கியமான அங்கமான பெரியபாதை எனப்படும் பகவானின் பூங்காவனம் (காடு) துவங்கும்.

இங்கிருக்கும் வாவர் பள்ளிக்கு நம்முடைய ஐயப்ப பக்தர்கள் செல்லுவது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உண்டு. இதைக் குறித்து ஏற்கனவே எனது நூலான ”ஸ்ரீ மஹாசாஸ்தா விஜய”த்தில் தெளிவுபடுத்தியுள்ளேன். இருந்தாலும் சில அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கொஞ்சம் விரிவான பதிவு.

மணிகண்டனின் புராணத்தோடு தொடர்புடைய இடம் எருமேலி. சாஸ்தா கிராதனாக - வேட்டைக்காரக் கோலத்தில் காட்சி தரும் திருத்தலம். மஹிஷி மாரிகா வனம் என்று இதற்கு புராணப் பெயர். மஹிஷிமாரிகாவனம் - எருமைக்கொல்லியாக மாறி பின்னர் எருமேலியாக மாறி இருக்கிறது.

இங்கிருக்கும் வாவர்பள்ளியில் ஐயப்ப பக்தர்கள் வணங்கும் பழக்கம், காலக்கணக்கில் மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றாகவே இருக்க முடியும்.

மணிகண்டனின் புராணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. சரியாக சொல்வதென்றால் த்வாபரயுகத்தைச் சேர்ந்தது. ஆனால் இஸ்லாம் என்ற சமயம் உருவாகி இன்னும் முழுமையாக 1500 ஆண்டுகள் ஆகவில்லை.

ஐயனின் சரித்திரமாக பலர் கூறும் கதைகளில் இடம்பெறுபவர் வாவர் என்ற இஸ்லாமியக் கடல் கொள்ளைக்காரர். (இந்த வாவரின் காலம் மிகவும் பிற்பட்டது. ஆர்ய கேரள வர்மனின் காலத்தையொட்டி வந்த வரலாற்றின் தொடர்ச்சியே இது. ஆர்ய வர்மனைக் குறித்த எனது கட்டுரை இதோ: http://shanmatha.blogspot.in/2011/10/blog-post.html )

சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனின் லீலைகளையும், மஹிஷி ஸம்ஹாரத்தையும், சபரிமலை கோவிலின் சிறப்பை முத்தாய்ப்பாக கூறி முடிக்கும் நூல் பூதநாதோபாக்யானம். (இந்நூல் ப்ரம்மாண்ட புராணத்தை சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது.) இந்த நூலில்தான் சபரிமலை யாத்திரைக்கான வழிகாட்டுதலையும், நெறிமுறைகளையும், அதற்கான சடங்குகளையும் குறித்து அறிய முடியும்.

சபரிமலை யாத்திரை க்ரமத்தை விளக்கும் பண்டைய நூல்களிலும் இப்படியொரு பள்ளியைப் பற்றி குறிப்பே இல்லை. மாறாக விபூதி தரிக்காதவனிடம் விபூதி வாங்குவது மஹா பாபம் என்றே இருக்கிறது.

சபரிமலை யாத்திரையில் வணங்க வேண்டிய முக்கியமான கேந்த்ரங்கள் உண்டு. பல பழமலைக்காரர்கள் அப்படித்தான் வணங்கி பூஜைகள் செய்து யாத்திரை செய்தார்கள்.

அப்படி கேந்திரங்களை பட்டியலிடும் போது, ஒவ்வொரு இடத்துக்கும் ஓர் அதிஷ்டான தேவதை உண்டு. அந்த தேவதையை வணங்கித் தான் யாத்திரை மேற்கொள்ளுவது வழக்கம்.

அப்படி ஏழு கோட்டைக்களை கணக்கிடும் போது, வாபுரக் கோஷ்டமாக எருமேலி கூறப்படுகிறது.

அதாவது,
முதல் கோட்டை            எருமேலியில்            வாபுரனும்
இரண்டாம் கோட்டை  காளைகெட்டியில்    நந்திகேஸ்வரனும்

மூன்றாம் கோட்டை     உடும்பாறையில்      ஸ்ரீபூதநாதனும்(வ்யாக்ரபாதன்)
நான்காம் கோட்டை      கரிமலையில்            பகவதியும்

ஐந்தாம் கோட்டை          சபரிபீடத்தில்             சபரிதுர்க்கையும்
ஆறாம் கோட்டை           சரங்குத்தியில்          அஸ்த்ர பைரவரும்

ஏழாம் கோட்டை             பதினெட்டாம்படி     கருப்பஸ்வாமியும்

பூஜை செய்து வணங்கி முன்னேறிச் செல்வதாக பண்டைய வழக்கம். (இன்று இந்த வழக்கம் வழக்கொழிந்து விட்டது.  பலர் எருமேலியில் ஓட ஆரம்பித்தால் பம்பை வந்து தான் நிற்பது என்ற விசித்ர குணத்தை கொண்டுள்ளார்களே ! பூதப்பாண்டி விரி போன்ற மிகச் சிலரே எனக்குத் தெரிந்து இன்றும் இந்த பண்டைய வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். )

இவர்களில் பெரும்பாலான தேவதைகளுக்கு ஆலயமோ நிலையமோ கிடையாது. (காளைகெட்டி கோவிலும், உடும்பாறைக் கோவிலும் மிகச்சமீபத்தில் உருவானவைதான்) இந்த தேவதைகளுக்கு அந்தந்த இடத்தில் ஸ்தானம் உண்டு. அதைக் கண்டறிந்து அந்த இடத்தில் கல்லிலோ, விளக்கிலோ ஆவாஹித்து பூஜிப்பது வழக்கம். அப்படி எருமேலி எனும் கோட்டையில் வணங்கவேண்டியது வாபுரன் என்ற பரிவார மூர்த்தியைத் தான்.


கணேசம் நைர்ருதே வாயௌ மஞ்சாம்பாம் ச ப்ரபூஜயேத்
பைரவௌ த்வஸிதாங்கஞ்ச பூர்வே வாமே ச வாபுரம்

என்று பூஜாவிதியில் வாபுரனை பகவானின் அங்கரக்ஷகனாக ஸங்கல்பித்து பூஜைகள் செய்யும்படி காணப்படுகிறது.

வாவர் எனும் இஸ்லாமிய நண்பர் மணிகண்டனுக்கு இருந்ததாக, சபரிமலை சரித நூலான ஸ்ரீ பூதனாதோபாக்யானம் கூறுவதில்லை. மாறாக,

"வாபுர கடுசப்தஸ் ச வீரபத்ரோதி வீர்யவான்
கூபநேத்ர கூபகர்ணோ கண்டா கர்ணோ மஹாபலி
இத்யாதயஸ் ச பூதாஸ்தே வக்ஷாதீதாஸ் ச தைஸ:
ப்ராப பம்பா தடம் சீக்ரம் பூதானாம் பதிரவ்யய:"

என்று ஐயனின் பூதப்பரிவாரங்கள் - வாபுரன், கடுசப்தன், வீரபத்ரன், கூபநேத்ரன், கூபகர்ணன், கண்டாகர்ணன், மஹாபலி எனும் எழுவருள் முதல்வனாக வாபுரன் என்பவனைக் குறிப்பிடுகிறது. இந்த வாபுரனும் ஐயனின் சேவகனேயன்றி, தோழனாக எங்கும் குறிப்பிடவில்லை.

[பூதனாதோபாக்யானம் நூலின் காலம் குறித்து கேள்விகள் இருப்பினும்,  அதிலும் கூட வாவர் என்ற இஸ்லாமிய தோழர் குறித்த செய்திகள் இல்லை என்பது தான் உண்மை.]

தர்மசாஸ்த்ரு பூஜா கல்பம் எழுதிய ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமிகளும் மிகத் தெளிவாக இந்தக் கருத்தை மறுத்து வாபுரன் என்ற சிவபூதம் மட்டுமே வணங்கத்தக்கது என்று உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

புராண காலத்துக்கும் வரலாற்றுக்கும் சற்று நெடிய கால இடைவெளி உண்டு. மஹிஷி என்ற புராண காலத்து அரக்கியை சாஸ்தா ஸம்ஹாரம் செய்ததையொட்டி எழுந்ததே சபரிகிரி ஆலயம்.

பண்டைய பாடல்களும், வழிபாட்டு முறைகளும் தெளிவாகவே இருக்கிறது; கதை சொன்னவர்களின் தவறோ, கேட்டவர்களின் தவறோ, வாவரும், பூதப்படைத் தலைவனான வாபரனும் ஒன்றாகக் கருதப்பட்டுவிட்டனர்.

கேரளம் என்பது பரசுராமரின் பூமி; ராமாயண சம்பவங்கள் பல நடந்தேறிய இடம்; சபரிகிரி ஆலயம், பரசுராம ப்ரதிஷ்டைகளில் ஒன்றாக கூறப்படும் போது, அது நிகழ்ந்த காலத்தையும் நோக்கத்தையும் ஆராய்ந்து நோக்குங்கால் புராண கால வழக்கத்தை மீறி நாமாக இடையில் நுழைந்த வழக்கங்களை ஏற்பது சரிதானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வளவு கஷ்டப்பட்டும் விரதங்கள் இருந்து யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்பன்மார்கள் எந்தவித தவறும் செய்யாமல் தங்கள் புனிதயாத்திரையைத் தொடர்ந்தால், ஐயன் அருள் இன்னும் மழைப் போல பொழியாதா?

ஸ்வாமி சரணம்
அரவிந்த் ஸுப்ரமண்யம்

No comments:

Post a Comment