இன்றைக்கு சுமார் 20-22 வருஷங்களுக்கு முன்னால். நான்(அரவிந்த் ஸுப்ரமண்யம்) அப்போது 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என் தந்தையின் நண்பர் ஒருவர், "ஒரு ஸ்வாமிகள் வந்திருக்கிறார். உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்கிறார்" என்று கேட்டிருக்கிறார். மஹாபெரியவரைத் தவிர வேறு எந்த சாமியாரையும் ஏற்றுக்கொள்ளாத அப்பா அதிசயமாக அதற்கு ஒத்துக்கொண்டார்.
சாமியார் என்றதும் பயங்கர தடபுடலை எதிர்பார்த்த எங்கள் முன் எந்த பந்தாவும் இல்லாத ஒரு க்ருஹஸ்தர் தான் வந்தார்.
"அம்பாள் இங்கே வரசொல்லி இருக்கா" என்றபடி வந்தார்.
"இவர் தான் காயத்ரி ஸ்வாமிகள்" என்றார் உடன் வந்தவர். நாங்கள் வணங்கி வரவேற்றோம்.
எங்கள் நண்பர் ஒருவர் நமஸ்காரம் செய்தார். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சட்டென்று அவரது உள்ளங்கையில் இருந்து ஒரு சிறிய பிள்ளையார் சிலையை வரவழைத்துக் கொடுத்தார்.
மற்றொரு நண்பர் பழங்கள் வாங்கி வந்திருந்தார். அவர்கள் கொண்டு வந்த ஆரஞ்சு பழம் ஒன்றை எடுத்துக் கொடுத்து, உரித்துப் பாருங்கள் என்றார். கடையிலிருந்து வாங்கி வந்த ஆரஞ்சு பழச்சுளைகளுக்குள் அழகாக மஹாலக்ஷ்மி நின்று கொண்டிருந்தாள்.
இதற்குள் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் மெதுவாக என்னிடம், " ஒளிச்சு வச்சு எடுப்பாரா இருக்கும். வித்யாசமா எந்த சுவாமியும் இல்லையே... புள்ளயாரும் லக்ஷ்மியும் எல்லா எடத்திலயும் உள்ளது தானே" என்று கமெண்ட் அடித்தார்.
அப்போதெல்லாம் நான் அதிகம் படங்கள் வரைவதுண்டு. யார் வந்தாலும் இந்த ட்ராயிங்குகளைக் காட்டுவேன். ஒரு சிறுவனுக்கே உரித்தான ஆர்வத்துடன் நான் லேட்டஸ்டாக வரைந்திருந்த ஆலிலைக் க்ருஷ்ணன் பென்சில் ட்ராயிங்கை காட்டினேன்.
"அம்பாள் இதுக்குதான் கூப்டாளோ... அவ உனக்கு என்ன தரான்னு பாரு" என்றார்.
திடீரென வரைந்த பேப்பர் கொஞ்சம் நடுவில் கசங்கலாயிற்று. என்னடா இது ட்ராயிங் வீணாகி விடப்போகிறதே என்று நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நான் வரைந்திருந்த ஆலிலைக் க்ருஷ்ணன் - படத்திலிருந்து விக்ரஹமாக வெளிப்பட்டான்.
ஆம் ! பேப்பர் கசங்கிய காரணம் விக்ரஹத்தின் எடை! கிட்டத்தட்ட 5 இன்ச் உயரத்தில், அரைக்கிலோவுக்கும் மேலான எடையில், நெற்றியில் கஸ்தூரி திலகம், சுருள் சுருளான கேசம், ஆலிலையில் படுத்துக் கொண்டு கட்டை விரலை கடிக்கும் கோலம் என நான் எப்படி வரைந்திருந்தேனோ அப்படியே அது உயிர்பெற்று விக்ரஹமாக வந்தது.
அத்தனை பேரும் அதிசயித்துப் போனோம். கமெண்ட் அடித்த நண்பர் வாயடைத்து விட்டார்.
இப்படி எங்களைத் தேடி வந்து எங்கள் பூஜையில் இடம் பிடித்துள்ள பால க்ருஷ்ணனே எங்கள் வீட்டு கோகுலாஷ்டமியின் கதாநாயகன்.
இன்று ஜன்மாஷ்டமிக்கு அவன் தயாராகிக் கொண்டிருக்கிறான்.
ஸ்வாமி சரணம்
அரவிந்த் ஸுப்ரமண்யம்
No comments:
Post a Comment