ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய ப்ரபஞ்சசார தந்த்ரம் என்னும் நூலில், ஸ்ரீ புவனேஶ்வரி உபாஸனை குறித்து பல அரிய தகவல்களை அளிக்கிறார்.
ஸ்ரீ புவனேஶ்வரியின் சதுரக்ஷரி மந்த்ரத்தைக் குறிப்பிடுகையில், தேவியை சூர்யாந்தர்கத சைதன்யமாக (சூரிய மண்டலத்தின் நடுவே பிரகாசிக்கும் சைதன்ய வடிவமாக) தியானிக்க வேண்டும் என்று ஆச்சார்யர் அருளுகிறார்.
भास्वद्रत्नौघमौलिस्फुरदमृतरुचो रञ्जयच्चारु रेखां सम्यक्संतप्तकार्तस्वरकमलजपाभासुराभिः प्रभाभिः।
विश्वाकाशावकाशं ज्वलयदशिशिरं धर्तृ पाशाङ्कुशेष्टाभीतीनां
भङ्गितुङ्गस्तनमवतु जगन्मातुरार्कं वपुर्वः।।
இங்கே தேவி ‘ஆர்க்க தனூ’ அதாவது, சூரியனையே தனது திருமேனியாகக் கொண்டவள். ஒளிவீசும் ரத்தினங்களால் ஆன கிரீடம், அதில் விளங்கும் சந்திரகலை, புடமிட்ட தங்கம், தாமரை மற்றும் செம்பருத்தி மலர் போன்ற அருண நிறப் பிரபை ஆகியவற்றால் அகில ஆகாய வெளி முழுவதையும் ஒளிரச் செய்பவள். நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், வரதம், அபயம் ஆகியவற்றை எந்தி அகில உலகத்திற்கும் தாயாக விளங்கும் அப்புவனேஸ்வரியின் 'ஆர்க்கத் திருமேனி' (ஸூர்ய ஸ்வரூபம்) நம்மைக் காப்பதாக.
एवमेषा जगत्सूतिः सवितेत्यभिधीयते।
यदा तदैति स्वैस्तत्त्वैश्चतुर्विंशतिधा भिदाम्।। (4.23)
இவ்வுலகத்தைப் படைப்பவள் (ஜெகத்ஸூதி) என்பதால், இவள் ‘ஸவிதா’ என்று அழைக்கப்படுகிறாள். இவளே தன் தத்துவங்களால் இருபத்து நான்கு (24) பிரிவுகளாக வியாபிக்கிறாள்.
तद्वर्णभिन्ना गायत्री गायकत्राणनाद्भवेत्।
सप्तग्रहात्मिका प्रोक्ता यदेयं सप्तभेदिनी।। (4.24)
தன்னைத் துதிப்பவர்களைப் பாதுகாப்பதால் (காயந்தம் த்ராயதே இதி காயத்ரீ), இவளே ‘காயத்ரீ’ தத்துவமாகவும் விளங்குகிறாள். மேலும் ஏழாகப் பிரிந்து சப்த கிரஹங்களின் வடிவமாகவும் திகழ்கிறாள்.
सर्वव्याप्ता हि सा शक्तिः शश्वद्भास्कररूपिणी।
स्वभासा क्रमते यत्र तत्रास्या स्थितिरिष्यते।। (4.29)
அனைத்திலும் நிறைந்திருக்கும் அந்த பராசக்தி, எப்போதும் பாஸ்கரனின் (சூரியனின்) வடிவமாகவே பிரகாசிக்கிறாள். தனது ஸ்வயம் ஜ்யோதியால் எங்கெல்லாம் வியாபிக்கிறாளோ, அங்கெல்லாம் அவளது இருப்பு நிலவுகிறது.
எனவே, ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் வாக்கின்படி, அகில காரண ப்ரம்மமாக திகழும் ஸ்ரீ புவனேஶ்வரி தேவியே, ஸூர்ய மண்டலத்தின் நடுவே காயத்ரீ மந்த்ரத்தின் மூலம் உபாசிக்கப்படும் 'ஸவித்ரு தத்துவம்' என்பது தெளிவாகிறது.
ஜெய் புவனேஶ்வரி
Dr அரவிந்த் ஸுப்ரமண்யம்
Aravind Subramanyam

No comments:
Post a Comment