Protected by Copyscape Website Copyright Protection

Tuesday, April 28, 2020

ஆதார சக்ரங்களில் அம்பிகையின் தரிசனம்

ஆதார சக்ரங்களில் அம்பிகையின் தரிசனம்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஸ்ரீ மஹாசாஸ்தாவின் ஆறு ஆதாரத் தலங்களைப் பற்றியும், ஸுப்ரமண்யரின் சக்ர தலங்களைப் பற்றியும் நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதேபோல் அம்பிகைக்கு ஆறு ஆதார க்ஷேத்ரங்கள் அமைந்திருப்பது பலரும் அறியாத உண்மை.
இந்த வரிசை பலரும் அறியாதது. பரம ரகசியமானது !

இங்கு நாம் காணும் திருத்தலங்கள் எல்லாமே பிரபலமான சிவக்ஷேத்திரங்களாக விளங்குவதைக் காணலாம்.
சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: என்னும்படி அந்த சிவம் வெளிப்படையாகத் தெரிந்தாலும், அவனை இயக்கும் ஆதார சக்தி அந்த ஆதிசக்தியே என்னும் சூட்சுமமே இதன் சாரம். அதனால் தான் அம்பிகையின் ஆட்சி பீடங்களாக இந்த தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.. இதை யாரோ சாமான்யர் சொல்லவில்லை.

அம்பிகையே இந்த ரகசியத்தை தக்ஷிணாமூர்த்தியிடம் வெளிப்படுத்தினாள். கர்ப்ப குலார்ணவம் என்ற தந்திர நூலில், ஸாக்ஷாத் பரமசிவனே, ஆனந்த பைரவராகத் தோன்றி, அம்பிகையின் இந்த அபூர்வ ரகஸ்யத்தை வெளிப்படுத்தியுள்ளார். அம்பிகை இந்த ஆதார சக்ரங்களில் கோவில்கொண்டு அவளே அகத்தே குண்டலினியாகவும் புறத்தே தேவதையாகவும் விளங்கி நிற்கும் நிலை அற்புதமானது.

அதன்படி இந்த ஒவ்வொரு திருத்தலங்களும் அம்பிகையின் மகத்துவத்தை, அம்பிகையின் வைபவத்தை, அம்பிகையின் தத்துவத்தை உணர்த்தக்கூடிய தலங்களாக இருக்கின்றன.

அம்பிகையின் ஸ்தூல வடிவத்தை இந்த ஆலயத்தில் தரிசிக்கிறோம், அவளது மந்திரமே ஸூக்ஷ்ம வடிவம்.. அவளது ஸூக்ஷ்மதம ரூபம் குண்டலினி வடிவம். குண்டலினி என்பது நம்முள் புதைந்திருக்கும் ஒரு புதையல்...

யத ப்ரஹ்மாண்டே தத பிண்டாண்டே
யத பிண்டாண்டே தத ப்ரஹ்மாண்டே

ப்ரபஞ்சமாகிய ப்ரம்மாண்டத்தில் இருப்பதுவே, மனித சரீரம் எனும் பிண்டாண்டத்திலும் இருக்கிறது. இவ்வுலகைப் படைத்த சிவ-சக்தி மயமான ப்ரப்ரம்மமே அதன் படைப்புக்களெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த சைதன்யமான பராசக்தி நம் உடலில் குண்டலினீ சக்தியாக ஸுஷும்னா எனும் நாடியின் அடியில் ஸர்ப்பம் போல மூன்றரை சுற்று, சுருண்டு கிடக்கிறாள்.

முதுகெலும்பான மேரு தண்டத்தின் வழியே ஸுஷும்னா நாடி செல்கிறது. அதன் அடியிலிருந்து நுனி வரை ஆறு சக்ரங்கள் இருக்கின்றன.

ப்ராண வாயுவை நாம் இடகலை பிங்கலை வழியாக செலுத்தி விரயம் செய்கிறோம். அதனை ஸுஷும்னா வழி செல்லுமாறு செய்தால் ஆறு ஆதார சக்ரங்களும் திறக்கும்.

"ஆறாதார அங்குச நிலையை பேறு நிறுத்திய பேச்சுரையறுத்தே" என்கிறார் ஔவையார். இந்த ஆறு ஆதாரங்களும் ஸூக்ஷ்ம உடலைச் சேர்ந்தவை.

இந்த நிலை யோக மார்க்கமாகவும், பாவனா மார்க்கமாகவும் ஸித்திக்கும். இதுவே உபாஸனையின் முடிவு; இதை நிலையாக அடைந்தவுடன் ஜீவன் முக்தி ஸித்திக்கும். இந்த நிலையை அடைந்தவர் மீண்டும் உலகியல் வாழ்வில் ஸம்பந்தம் இல்லாமல் அம்பிகையின் ப்ரம்மானந்தத்திலேயே திளைத்தவராக வாழ்வர்.

நம் உடலின் ஆதார சக்ரங்களும் அவற்றின் ஸ்தானங்களும்:

மூலாதாரம் முதுகெலும்பின் முடிவில் - ஆசன த்வாரத்தின் அருகில்

ஸ்வாதிஷ்டானம் நாபிக்கும் மூலாதாரத்துக்கும் நடுவில்

மணிபூரகம் நாபியின் பின்னால்

அனாகதம் இதயத்தின் பின்னால்

விசுத்தி தொண்டையின் பின்னால் - கழுத்துப் பகுதி

ஆஞ்ஞா புருவ மத்தியின் பின்னால்

ஸஹஸ்ராரம் தலை உச்சி

த்வாதசாந்தம் - ஆக்ஞா சக்ரத்திலிருந்து 12 அங்குல் உயரத்தில் உள்ளது

ஷோடசாந்தம் – ப்ரம்மரந்த்ரத்திலிருந்து ஆறு அங்குல உயரத்தில் உள்ளது

சூட்சும சரீரத்தில் அனுபவிப்பதே குண்டலினி யோகம் ஆன்ம ஸாதனையில், யோக நிஷ்டையில் நாம் அடையும் ஆனந்தத்தை– புறத்தே ஸ்தூல சரீரத்தில் கண்ணாரக் கண்டு உணரவே அம்பிகை இந்த ஆலயங்களில் குடி கொண்டாள்.

அம்பிகை தன்னிடம் உரைத்த ரகசியத்தை ஈசன் உடைத்து உரைக்கிறார்: :

வல்மீகபுர மத்யஸ்தா ஜம்பூ வன நிவாஸினி |
அருணாசல ச்ருங்கஸ்தா வ்யாக்ராலய நிவாஸினி ||
ஸ்ரீ காளஹஸ்தி நிலையா காசீபுர நிவாஸினி |
ஸ்ரீமத் கைலாச நிலயா த்வாதசாந்த மஹேச்வரி ||
ஸ்ரீ ஷோடசாந்த் மத்யஸ்தா ஸர்வ வேதாந்த லக்ஷிதா |

என்று அவள் ஒவ்வொரு சக்ரத்துக்கும் எங்கே கோவில் கொண்டுள்ளாள் என்று ஆனந்த பைரவர் விவரிக்கிறார்.

மூலாதாரம் – அனைத்துக்கும் ஆதாரமான கமல மொட்டினை தன் தவத்தால் மலரவைக்கும் கமலாம்பாள் : திருவாரூர்

ஸ்வாதிஷ்டானம் – ஸ்வ அதிஷ்டானம் என்று அகிலத்தையே தன் இடமாக ஆட்சி புரியும் அகிலாண்ட நாயகி : திருவானைக்கா

மணிபுரகம் – பேரொளி பொருந்திய ரத்தினமென ஜோதிஸ்தலத்தில் ஸ்வயம் ஜோதியாக ஒளிரும் அபீதகுசாம்பிகை : திருவண்ணாமலை

அநாஹதம் - ஹ்ருதாகாசத்தை தன் வசப்படுத்தி ஆடாதாரை ஆட்டுவிக்கும் சிவகாமசுந்தரி : சிதம்பரம்

விசுத்தி - அக்ஞான குப்பையை சுத்தி செய்து ஞானப் பூங்காற்றாய் வருடும் ஞானப்ரஸூனாம்பிகை :திருக்காளத்தி

ஆக்ஞா - மோக்ஷம் எனும் வீட்டுக்கு அழைத்து, அமுதூட்டி அனுப்பிவைக்கும் அன்னபூரணி : காசி

ஸஹஸ்ராரம் - ஸகல தத்துவங்களையும் கடந்த ஞானவெளியில் தானே நாமாகி வியாபித்து விளங்கும் உமா மஹேச்வரி : திருக்கயிலாயம்

த்வாதசாந்தம் – ஸாக்ஷாத் ஸ்ரீமஹாராக்ஞியாக விளங்கி அருளாட்சி செய்யும் மதுரை மீனாக்ஷி

ஷோடசாந்தம் – மனம் நாசம் அடையும் ஷோடசாந்தம் ஸர்வமுமாகி நிற்கும் ஸ்ரீ காமாக்ஷி மஹாத்ரிபுர ஸுந்தரி

(இதைக் குறித்து ஏற்கனவே ஒரு சிறிய நூல் ஞான ஆலயம் பத்திரிக்கைக்காக என்னால் எழுதப்பட்டது. அதை இன்னும் விரிவாக்கி முழு நூலாக்க ஆசை உள்ளது. அதை அம்பிகை அருள் கூட்டுவிக்க வேண்டும் – அரவிந்த் ஸுப்ரமண்யம்)

இந்த க்ஷேத்திரங்களிலெல்லாம் ஒரு ஸாதகன் தரிசனம் செய்யும் போது, அவனையும் அறியாமல் ஓர் அகப்பயணம் நடைபெறுகிறது. ஸாதகன் சிவனையும், சிவனோடிணைந்த சக்தியையும் உணர்கிறான். இப்பொழுது ஸாதகனுக்கு, இரண்டும் ஒன்றே' என்று புரிய ஆரம்பிக்கிறது. 'ஒன்றை விட்டு இன்னொன்று தனியாக இயங்குவதில்லை' என்பதும் நன்கு விளங்குகிறது. இந்த உயரிய நிலையில், அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத பாவம் அனுபவமாகிறது.

ஸாதகன் தன்னையே சிவமாக, சக்தியாக உணர்ந்த பின் அவனுக்கு ஜனன, மரணம் என்பது இல்லை. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் மட்டுமே !

ஸர்வம் சக்தி மயம் ! அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்

V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

No comments:

Post a Comment